திருச்சி துரைசாமிபுரத்தைச்சேர்ந்த அலெக்ஸ், ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டிருந்தார். பின்னர் சினிமா, மேஜிக் என்று பிரபலம் ஆகிவிட்டார்.
ரஜினி தயாரித்த வள்ளி படம் மூலம் அறிமுகமான அலெக்ஸ் (52). மிட்டா மிராசு, கோவில்பட்டி வீரலட்சுமி, சூர்யா நடித்த ஆதவன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் மேஜிக் நிபுணரான நடிகர் அலெக்ஸ் தொடர்ந்து 24 மணி நேரம் மேஜிக் நிகழ்ச்சி செய்து கின்னஸ் சாதனை படைத்தவர்.
உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நடிகர் அலெக்ஸ் மே-1ம் தேதி சென்னையில் மரணம் அடைந்தார். அவரது உடல் திருச்சி துரைசாமிபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு திருச்சி முக்கிய பிரமுகர்கள் நடிகர்கள், தொழில்அதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அலெக்ஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர்.
இன்று (3-ந்தேதி) மாலை அலெக்ஸ் உடல் துரைசாமிபுரம், வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
ஆற்றுப்பாக்கம் அந்தோனியார் கோயில் அலெக்ஸ் உடலை வைத்து சிறப்புபூஜை செய்தனர். இந்த பூஜையில் திருச்சி பிஷப் ஆண்டனி டிவோட்டா, எம்.பி. சிவா, எம்.எல்.ஏ. பெரியசாமி, அதிமுக எம்.பி. குமார் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் சிறப்பு பூஜையின் போது அலெக்ஸ் பற்றிய நினைவுகளை கூறினார்.
பின்னர் அலெக்ஸ் உடல் மேலப்புதூர் வேர்ஹவுஸ் அருகில் உள்ள ஆர்.சி.எம்.சி. கல்லறை தோட்டத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
அங்கு அவர் இறந்த நேரத்திற்கே அலெக்ஸ் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment