ஆந்திர முன்னாள் முதல்- மந்திரி மறைந்த என்.டி. ராமராவின் பேரன் ஜூனியர் என்.டி.ஆர். தெலுங்கில் பிரபல நடிகராக உள்ளார். இவருக்கும் முன்னாள் முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு உறவினர் மகளான லட்சுமி பிரணதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
ஜூனியர் என்.டி.ஆர்- லட்சுமி பிரணதி திருமணம் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.41 மணிக்கு நடக்கிறது. கடந்த ஒரு மாதமாக திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது.
ஐதராபாத் அருகே உள்ள மாதாபூரில் திருமணப்பந்தல் போடப்பட்டு உள்ளது. ரூ.5 கோடி செலவில் பிரத்யேகமாக திருமண மண்டபமும் கட்டப்பட்டு உள்ளது. பந்தலை சுற்றிலும் அலங்கார வேலைப்பாடுகளுடன் சிலைகள், நீர்வீழ்ச்சிகள், அரண்மனை வாயில்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
ஜூனியர் என்.டி.ஆர். ரசிகர்கள், அரசியல், திரையுலக பிரமுகர்கள் 17 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டு உள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சமையல் கலை நிபுணர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். 55 உணவு வகைகளுடன் விருந்து பரிமாறப்படுகிறது. “பப்பே” முறையில் இல்லாமல் பந்தி போட்டு உணவு பரிமாறுகின்றனர்.
இன்று இரவு 7 மணி முதல் திருமண நிகழச்சிகள் துவங்குகின்றன. விடிய விடிய விருந்து நடைபெற உள்ளது. தெலுங்கு சம்பிரதாய சடங்குகளுடன் திருமணம் நடக்கிறது.
திருமண ஏற்பாடுகளை ஒரு வாரமாக ஜூனியர் என்.டி. ஆர். நேரில் வந்து செய்து முடித்துள்ளார். திருமணத்துக்காக ஒரு மாதம் படப் பிடிப்புக்களை ரத்து செய்துள்ளார்.

No comments:
Post a Comment