சிம்பு போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கும் படம் ஒஸ்தி. இது தமிழா, இல்லை வேறு ஏதாவதா என்பது குறித்து ஆளாளுக்கு பட்டிமன்றம் நடத்துவார்கள் என்பதை தெரிந்தே வைத்திருப்பார் போலும் இயக்குனர் தரணி. அதென்னங்க ஒஸ்தி என்று கேட்ட மாத்திரத்தில் விளக்க முற்பட்டார்.
இதெல்லாம் வட்டார சொல். தில் என்று பெயர் வைச்சேன். தைரியம் என்பதன் வட்டார சொல்தான் தில். எதிலும் முதலிடத்தில் வருபவன் என்பதுதான் கில்லி. அது மாதிரிதான் இந்த ஒஸ்தியும். இது தமிழா, வரிவிலக்கு கிடைக்குமா என்பது பற்றியெல்லாம் எங்க தயாரிப்பாளர் பேசிப்பார் என்றார்.
சிம்பு படம் என்றாலே கோன் ஐஸ்சிலிருந்து குல்பி ஐஸ் வரைக்கும் வரிசை கட்டி நிற்குமே? இந்த படத்திலும் அது தொடர்கிறது. அவரால் வரவழைக்கப்பட்டிருக்கிறார் ஆந்திரா அல்லோகலம் ரிச்சா கங்கோபாத்ரா என்ற அழகி. வெங்கடேஷ், ராணா, போன்ற முன்னணி ஸ்டார்களுடன் ஜோடி போட்டவர்தானாம் இந்த ரிச்சா.
சிம்புவுக்கு அம்மாவாக ரேவதி நடிக்கிறார். இன்னொரு முக்கிய வேடத்தில் ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார். இந்த கதைக்கு இவரை விட்டா பொறுத்தமான ஆளே இல்லை என்று தரணி சொன்னதுதான் சற்றே மிகையாக பட்டது.
விண்ணை தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு வானம் படத்தில் நல்ல கேரக்டரில் நடிச்சீங்க. அப்படியே உங்க ரூட் மாறிடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் மீண்டும் ஆக்ஷன் பக்கம் போயிட்டீங்களே என்று சிம்புவிடம் கேட்டால், தொண்டைய செருமிக் கொண்டு பேச ஆரம்பிக்கிறார்.
ஒரு நடிகன்னா எல்லாவிதமான கதைகளிலும்தான் நடிக்கணும். ஒரே மாதிரி நடிச்சா ஏன் ஒரே மாதிரி நடிக்கிறீங்கன்னு நீங்களே கூட கேட்பீங்க. இந்த படத்தில் இன்ஸ்பெக்ட்டரா இருந்தாலும், குடும்ப சென்ட்டிமென்ட் காட்சிகள் நிறைய இருக்கும். அதுமட்டுமல்ல, ரொம்ப சீரியஸ் ஆக இல்லாமல் கொஞ்சம் ஹியூமராகவும் இருப்பார் இந்த இன்ஸ்பெக்டர் என்றார்.
ஒரே ஒரு அதிர்ச்சிதான். டிபார்ட்மென்ட்டுக்கே கம்பீரம் கொடுக்கும் அந்த அடாவடி மீசைதான் இல்லை சிம்புவுக்கு!
சிம்பு, சல்மான் ரசிகர் என்பதால் இப்படி இருக்குமோ?

No comments:
Post a Comment