வலுவான ஜன் லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றக்கோரி, காந்தியவாதி அன்னா ஹசாரே 9-வது நாளாக நேற்று உண்ணாவிரதம் இருந்தார். இந்நிலையில், அவரது உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் இன்று கலந்து கொள்கிறார்.
இதற்காக, விஜய் இன்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லி செல்கிறார். தன் ரசிகர்களுடன் ராம்லீலா மைதானத்துக்கு சென்று அன்னா ஹசாரேவை சந்திக்கிறார். அறவழி போராட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவித்து, வாழ்த்துகளையும் வழங்குகிறார்.
இன்று முழுவதும் அன்னா ஹசாரேவுடன் நடிகர் விஜய் உண்ணாவிரதம் இருந்து விட்டு, இன்று இரவு சென்னை திரும்புகிறார். இதற்கிடையே, யோகா குரு பாபா ராம்தேவ், நேற்று ராம்லீலா மைதானத்துக்கு சென்று அன்னா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
ஹசாரேவுடன் ஒரு மணி நேரம் இருந்ததாகவும், பேச்சுவார்த்தையில் நிலவும் முட்டுக்கட்டை விரைவில் முடிய வேண்டும் என்றும் அவர் கூறினார். பா.ஜனதா எம்.பி. வருண் காந்தி, டெல்லி சிவில் கோர்ட்டு நீதிபதி அஜய் பாண்டே ஆகியோரும் ராம்லீலா மைதானத்துக்கு வந்து ஆதரவு தெரிவித்தனர்.
சோனியா காந்தி தலைமையிலான தேசிய ஆலோசனை கவுன்சிலின் உறுப்பினர் அருணா ராயும் அன்னா ஹசாரேவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இவர் சமீபத்தில் ஹசாரேவை விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் அமீர்கான் தயாரித்த `பீப்லி லைவ்' என்ற இந்தி படத்தில் நடித்த ரகுவீர் யாதவும் ராம்லீலா மைதானத்துக்கு சென்று ஆதரவு தெரிவித்தார்.
No comments:
Post a Comment