2012-2013-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசிய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி, சேவை வரி 10 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார். இந்த வரி உயர்வு ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது.
தற்போது சேவை வரி விதிக்கப்படும் சேவைகளின் பட்டியலில் 119 சேவைகள் உள்ளன. வெளிநாடுகளில் எதிர்மறை பட்டியல் என்ற, சேவை வரி விதிக்கப்படாத சேவைகளின் பட்டியல் நடைமுறையில் உள்ளது. அதேபோல் இந்தியாவிலும் எதிர்மறை பட்டியல் நடைமுறைப்படுத்தப்படுவதாக பட்ஜெட் உரையின் போது அறிவித்த பிரணாப் முகர்ஜி, அந்த எதிர்மறை பட்டியலில் மழலையர் கல்வி மற்றும் பள்ளி கல்வி, அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சி கல்வி, குடியிருப்புகளை வாடகைக்கு விடுதல், பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை சேவைகள், மீட்டர் பொருத்தப்பட்ட டாக்சிகள், ஆட்டோ ரிக்ஷா, லாட்டரி, பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட 17 வகையான சேவைகள் இடம் பெற்று இருப்பதாகவும் கூறினார்.
இந்த நிலையில், இந்த எதிர்மறை பட்டியலில் இடம் பெற்றுள்ள 17 வகையான சேவைகளை தவிர, கிட்டத்தட்ட பிற அனைத்து சேவைகளும் வருகிற ஜூலை 1-ந் தேதி முதல் சேவை வரி வரம்புக்குள் கொண்டு வரப்படுவதாக நிதி அமைச்சகம் அறிவித்து உள்ளது.
அதன்படி, பள்ளிக்கூடங்கள் மற்றும் பல்கலைக்கழக கல்விக்கு சேவை வரி கிடையாது என்ற போதிலும் பயிற்சி வகுப்புகள் (கோச்சிங் கிளாஸ்), பயிற்சி நிறுவனங்கள் ஆகியவை சேவை வரியின் கீழ் கொண்டு வரப்படுகின்றன.
ரெயிலில் முதல் வகுப்பு பயணம், குளிர்சாதன வசதி பயணம் ஆகியவற்றுக்கும் இனி சேவை வரி விதிக்கப்படும். அதாவது இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்வதற்கு ஆகும் செலவு, இறுதிச்சடங்கு தவிர கிட்டத்தட்ட அனைத்து சேவைகளும் சேவை வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டு விட்டன.
இந்த 2012-2013-ம் நிதி ஆண்டில் சேவை வரியின் மூலம் ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் கோடி வசூலிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.
No comments:
Post a Comment