இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் மத்திய அரசின் புத்தகங்களில் வெளியாகியுள்ள கேலிச் சித்திரத்தைக் கண்டித்து மதிமுக சார்பில் ஜூன் 11ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சிப் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ் அறிஞர்களும், இலட்சக்கணக்கான மாணவர்களும் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டம், தமிழக வரலாற்றின் வீரம் செறிந்த அத்தியாயம் ஆகும். ஆனால், மத்திய அரசு பாடத்திட்டத்தில் 12 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில், இந்த வரலாறைத் திரித்துக் கூறி, தமிழர் மனங்களைக் காயப்படுத்தும் விதத்தில் கருத்துப்படத்தை வெளியிட்டு இருக்கின்றது. இதில், இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்ட மாணவர்களுக்கு, ஆங்கிலமும் தெரியாது என்றும், ஆனால், ஆங்கிலம் வேண்டும் என்ற கோரிக்கை முழக்கத்தை முன்வைத்ததாகவும், அன்றைய மாணவர்களை இழிவுபடுத்துகிறது.
1965 இல் இந்தி எதிர்ப்பு மொழிப்புரட்சி எரிமலையாக வெடித்தபோது, அதில் இலட்சக்கணக்கான மாணவர்கள் பங்கு ஏற்றனர். அப்போது, கல்லூரி மாணவர்களுக்கு நல்ல ஆங்கிலப் புலமையும் உண்டு. இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்றால், நாம் இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டு விடுவோம்; எனவே, தமிழ் ஆட்சி மொழியாக ஆக வேண்டும். அதுவரை, ஆங்கிலம் மட்டுமே ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டும் என்ற இலக்கை முன்வைத்தே போராட்டம் நடைபெற்றது.
ராஜாஜி
இந்தக் கருத்துப் படத்தில், அன்றைய தமிழக முதல் அமைச்சர் பக்தவத்சலம் படமும் இடம் பெற்று இருக்கிறது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நசுக்குவதற்கு, கொடிய அடக்குமுறையை அவர் ஏவினார் என்பதுதான் உண்மை ஆகும். 37 இல் இந்தியைத் திணித்த இராஜாஜி, அறுபதுகளில், இந்தியைக் கடுமையாக எதிர்த்தார்.
தீக்குளிப்பு
37 போராட்டத்தில் தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு, பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நடராஜனும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்த தாளமுத்துவும், இப்போராட்டக் களத்தில் சிறையிலேயே மாண்டனர். 64 இல் சிங்கத்தமிழன் சின்னச்சாமி, திருச்சி ரயிலடியில் இந்தியை எதிர்த்து முழங்கி, தீக்குளித்து மடிந்தார்.
1964 இல், அறிஞர் அண்ணாவின் ஆணைக்கு ஏற்ப அவரது இயக்கம், அரசியல் சட்டத்துக்குத் தீயிட்டுக் களம் கண்டது. 1965 இல், அறப்போருக்கு அறிஞர் அண்ணா அறைகூவல் விடுத்தார். சிவலிங்கம், அரங்கநாதன், ஆசிரியர் வீரப்பன், விராலிமலை சண்முகம், சத்தியமங்கலம் முத்து, கீரனூர் முத்து, மாயவரம் சாரங்கபாணி, பீளமேடு தண்டபாணி ஆகியோர், இந்தியை எதிர்த்துத் தீக்குளித்து மடிந்தனர்.
1965 மாணவர் போராட்டத்தை ஒடுக்க, இந்திய இராணுவம் எண்ணற்ற தமிழர்களைச் சுட்டுக் கொன்றது. தமிழகம் அதுவரை வரலாறு காணாத போராட்டம், பூகம்பமாய் வெடித்தது. இதன் விளைவாகவே, 1967 இல் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.
இந்திக்குத் தமிழ்நாட்டில் இடம் இல்லை என்று, முதல்வராக அறிஞர் அண்ணா, ஒருமனதாக சட்டமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றினார். இந்தத் தியாக வரலாறை இழிவுபடுத்தும் நோக்கத்தில், மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் கேலிச்சித்திரத்தை பாடபுத்தகத்தில் அச்சிட்டு உள்ளது. மத்திய அரசு பாடத்திட்டத்தை ஏற்றுள்ள பள்ளிகளில் மட்டும் அல்லாது, இந்தியாவில் 13 மாநிலங்களில் இந்த பாடத்திட்டமே ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.
எனவே, வரலாற்று உண்மையை மூடி மறைத்து, தமிழர்களையும் குறிப்பாக தமிழக மாணவர்களையும் ஏளனமாக இழிவு செய்யும் வகையில் கேலிச்சித்திரத்தை இடம் பெறச் செய்ததைக் கண்டிக்கின்ற வகையிலும், மத்திய அரசும், பயிற்சிக் கழகமும் உடனடியாக அந்தக் கேலிச்சித்திரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவும்,
ஜூன் 11 ஆம் நாள் திங்கள் கிழமை காலை 11 மணி அளவில் வடசென்னை துறைமுகத்துக்கு எதிரில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில் எனது தலைமையில் மறுமலர்ச்சி தி.மு.க.அறப்போர் நடத்துகிறது என்று வைகோ கூறியுள்ளார்.
என்ன செய்யுறது பொழப்பு ஓடனும்ல்ல.....?????இல்லேன்னா மக்கள் மறந்துடுவாங்க......
ReplyDelete