தமிழ் ஈழத்துக்கான இறுதிப் போரின் போது தமிழரை குவியல் குவியலாகக் கொன்றழித்த இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு மேலும் பல புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
பிரிட்டனின் தி இன்டிபென்டன்ட் பத்திரிகை இந்த ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. தங்களுக்கும் இந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசின் தகவல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "பிரிட்டனிலிருந்து வெளிவரும் 'த இன்டிபென்டன்ட்' பதச்திரிகையிடம் இந்த ஆதாரங்களை வழக்கறிஞர் வாசுகி முருகதாஸ் கொடுத்திருந்தார். அவைதான் இப்போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடம் கிடைத்துள்ளன.
கைதொலைபேசியின் வழியே பதிவு செய்யப்பட்ட, 25க்கும் மேற்பட்ட ஒளிப்படங்களுடன், 3நிமிட அளவிலான வீடியோவும் ஆதாரங்களாக உள்ளன," என்று கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில், சுதந்திரமான அனைத்துலக விசாரணையின் அவசியத்தை மீண்டும் ஒருதடவை, இந்த ஆதாரங்கள் வலியுறுத்தி நிற்பதாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவல் துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தீவில் இயங்கி வரும் அந்நாட்டின் அரசியல், இராணுவக் கட்டமைப்பின் உயர் மட்டத் தலைவர்களுக்கு, இக் காட்டுமிராண்டித்தனமான குற்றங்களில் பெரும் பங்குண்டு என்பதுடன், அவர்களின் பங்களிப்புடனேயே, இக் கொடுமைகள் நிகழ்ந்துள்ளன என்பதை இந்த ஆதாரங்கள் தெளிவாக காட்டுகின்றன.
இதுவரை வெளிவந்துள்ள எல்லாவகை ஆதாரங்களின் அடிப்படையில், இன்றைய தேவை சுதந்திரமான அனைத்துலக விசாரணை ஒன்று மட்டுமே என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உள்பட சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
No comments:
Post a Comment