தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக டெல்லி சென்றார். புதன்கிழமை இரவு மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஆகியோர் முன்னாள் மத்திய மந்திரி ராசாவை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தனர்.
வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தார். மதியம் 12.45 மணிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஜனாதிபதி தேர்தலில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கருத்தை அவர்களிடம் மு.க.ஸ்டாலின் விளக்கி கூறினார். மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜியையும் சந்தித்து பேசினார்.
டெல்லி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு மு.க.ஸ்டாலின் நேற்று நள்ளிரவு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை மரியாதை நிமித்தம் சந்தித்து பேசினேன். ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது குறித்து பரிசீலனை நடந்து வருகிறது.
ஜனாதிபதி வேட்பாளரை முடிவு செய்யும் அதிகாரம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை வருகிற 13-ந்தேதி அறிவிப்பார்.
தி.மு.க.வினர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடப்படுகிறது. இதை எதிர்த்து ஏற்கனவே போராட்டம் நடத்தி இருக்கிறோம். தி.மு.க.வினரின் அடுத்தக் கட்ட போராட்டம் குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி முடிவு செய்வார்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
தி.மு.க. தலைவர் பதவிக்கு போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை.
No comments:
Post a Comment