தீவிரவாதிகளுடன் தொடர்புடைய இந்தி நடிகை லைலா கான் கடந்த ஒன்றரை வருடமாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் படங்களிலும் ‘வாபா' உள்ளிட்ட சில இந்தி படங்களிலும் நடித்திருப்பவர் லைலா கான். இவரது உண்மையான பெயர் ரேஷ்மா படேல். மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இகத்புரி என்ற இடத்தில் பண்ணை வீடு கட்டி வாழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இவர் காணாமல் போனார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து அவரது தந்தை நதிர் படேல் போலீசில் புகார் செய்தார்.
அவர்கள் நடத்திய விசாரணையில் லைலா கானுக்கும் தீவிரவாதிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. பின்னர் இந்த வழக்கை தீவிரவாத தடுப்பு குழுவினர் விசாரிக்க தொடங்கினர். இதற்கிடையில் லைலா துபாய் சென்று விட்டதாக ஒரு சிலர் கூறினர். இதை அவரது தந்தை மறுத்து விட்டார். கடைசியாக நாசிக் மாவட்டத்தில் லைலா செல்போனில் பேசியது தெரிய வந்துள்ளது. அதன்பிறகு அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில் இகத்புரியில் உள்ள லைலாவின் பண்ணை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதை கேள்விப்பட்டு சோதனை நடத்துவதற்காக தீவிரவாத தடுப்பு குழுவினர் சென்றனர். தடயங்களை அழிப்பதற்காக தீவிரவாதிகள் யாராவது வீட்டுக்கு தீ வைத்தார்களா என்று அவர்கள் விசாரித்தனர். லைலாவுக்கும் வங்கதேசத்தை சேர்ந்த தீவிரவாதி பர்வேஷ் இக்பால் தக் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. இவரை லைலா திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
டெல்லியில் நடந்த ஒரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் பர்வேஷ், லைலாவுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. லைலா காணாமல் போனதற்கு பின்னணியில் பர்வேஷுக்கும் அவரது நண்பருக்கும் தொடர்பு இருப்பதாக லைலாவின் தந்தை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். லைலா ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு கடத்தி செல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஜம்மு போலீசார் தெரிவிக்கின்றனர். மர்மமான முறையில் லைலா காணாமல் போனது பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லைலா கான் நடித்த வாபா படத்தை இயக்கிய ராகேஷ் சாவந்த் கூறும்போது, '‘வாபா பட வெளியீட்டு விழாவுக்கு அழைக்க இகத்புரியில் உள்ள லைலாவின் பண்ணை வீட்டுக்கு சென்றேன். அங்கு துப்பாக்கியுடன் சிலர் காவலுக்கு நின்றிருந்தனர். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்' என்றார். இவரது பேட்டி போலீசார் மத்தியில் மேலும் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
No comments:
Post a Comment