புதுக்கோட்டை அடுத்த வாராப்பூரில் உள்ள தேமுதிக அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்த முத்துக்குமரன் விபத்தில் பலியானார். இதனையடுத்து அங்கு வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டமான், தேமுதிக சார்பில் ஜாகீர் உசேன், ஐஜேகே சார்பில் சீனிவாசன் மற்றும் சுயேச்சைகள் என்று 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆனால் முக்கிய கட்சிகளான திமுக, மதிமுக, பாஜ, இந்திய கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடவில்லை. இதனால் புதுக்கோட்டை தொகுதியில் அதிமுக, தேமுதிக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேனுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, இளைஞரணி மாநில செயலளரும், விஜயகாந்த்தின் மச்சானுமான சுதீஷ் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாராப்பூர் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் அதிமுகவையும், முதல்வர் ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்ச்சனம் செய்தார். இதனால் தேமுதிக, அதிமுகவினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்த போலீசார் சமாதனம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் ஜூன் 8ம் தேதி இரவு 11 மணியளவில் வாராப்பூரில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த தேமுதிக நிர்வாகிகள் அங்கு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்த தகவலை அறிந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவி்த்துள்ளார். இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று புதுக்கோட்டை தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இதனால் தேமுதிக மற்றும் அதிமுக தொண்டர்கள் இடையே மோதல் வராமல் இருக்க போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment