மதுரை இளைய ஆதீனமாக சமீபத்தில் சுவாமி நித்யானந்தா பொறுப்பு ஏற்றார். இதுபற்றி கடந்த மாதம் 8-ந்தேதி காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேட்டியளித்தபோது, நித்யானந்தாவுடன் எப்போதும் நடிகை ரஞ்சிதா இருக்கிறார். எனவே நித்யானந்தா இளைய ஆதீனமாக பொறுப்பு ஏற்றதை ஏற்க முடியாது என்றார்.
ஜெயேந்திரர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகை ரஞ்சிதா எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
ஜெயேந்திரர் மீதான இந்த அவதூறு வழக்குக்காக அவர் கடந்த மாதம் 2 தடவை கோர்ட்டில் ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நான் ஜெயேந்திரரின் பேட்டியால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஜெயேந்திரர் மீதான இந்த வழக்கு இன்று மீண்டும் மாஜிஸ்திரேட் நசீர் அகமது முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை ரஞ்சிதா சகோதரி ஜோதி கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவர் கூறியதாவது:-
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், எனது தங்கை ரஞ்சிதா பற்றி தெரிவித்த கருத்துக்களால் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் கடுமையாக மன உளைச்சலில் பாதிக்கப்பட்டுள்ளோம். சினிமாவில் நடித்து பிரபலமான ரஞ்சிதாவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஜெயேந்திரர் பேட்டி வெளியானவுடன் பலர் எங்களுக்கு போன் செய்து விசாரித்தனர். இதனால் நாங்கள் அவமானத்துக்கு உள்ளோம். எனவே ஜெயேந்திரர் சொன்ன கருத்துக்கள் தொடர்பாக உரிய முறையில் விசாரிக்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு நீதி கிடைக்க ஆவன செய்ய கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜோதியின் இந்த வாக்குமூலம் சாட்சியமாக பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை வருகிற 15-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment