உலகின் 2-வது மிகப்பெரிய கால்பந்து திருவிழாவான யூரோ கோப்பை என்று அழைக்கப்படும் ஐரோப்பிய கால்பந்து போட்டி போலந்து நாட்டில் நேற்று தொடங்கியது.
14-வது ஐரோப்பிய கால்பந்து போட்டியை போலந்தும், உக்ரைனும் இணைந்து நடத்துகிறது. இந்த போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்று உள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும்.
தொடக்க நாளில் 2 ஆட்டம் நடந்தது. 'ஏ' பிரிவில் நடந்த ஆட்டத்தில் ரஷியா- செக்குடியரசு அணிகள் மோதின. ரஷிய வீரர்களின் அபாரமான ஆட்டத்தால் செக்குடியரசு திணறியது. ஆட்டம் முழுவதும் தன்வசப்படுத்திக்கொண்ட ரஷியா 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
ரஷியா தரப்பில் ஆலன் டிஜாகோவ் 2 கோல் அடித்தார். அவர் 15-வது மற்றும் 79-வது நிமிடங்களில் கோல் அடித்தார். ஷிர்கோவ் (24-வது நிமிடம்), பயோலச் சென்கோவ் (82-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். செக்குடியரசு சார்பில் 52-வது நிமிடத்தில் வாக்லவ்பிளர் கோல் அடித்தார். ரஷியா 2-வது ஆட்டத்தில் போலந்தை வருகிற 12-ந்தேதி சந்திக்கிறது.
முன்னதாக ஏ பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் போலந்து- முன்னாள் சாம்பியன் கிரீஸ் அணிகள் மோதியது. இந்த ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது. கிரீஸ் 2-வது ஆட்டத்தில் செக்குடியரசுவை 12-ந்தேதி எதிர்கொள்கிறது.
3 முறை சாம்பியான ஜெர்மனி தொடக்க ஆட்டத்தில் இன்று போர்ச்சுக்கல் (பி பிரிவு) சந்திக்கிறது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.
இரவு 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நெதர்லாந்து- டென்மார்க் அணிகள் மோதுகின்றன.
No comments:
Post a Comment