ஜனாதிபதி தேர்தல் வருகிற ஜூலை மாதம் 19-ந்தேதி நடக்கிறது. இதற்காக கடந்த 16-ந்தேதி தொடங்கிய மனுதாக்கல் வருகிற 30-ந்தேதியுடன் முடிவடைகிறது.
ஆளும் காங்கிரசுக்கும், எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவுக்கும் தனி மெஜாரிட்டி இல்லாததால் கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் வேட்பாளர் தேர்வில் தேக்கநிலை ஏற்பட்டது.
தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே முன்னாள் சபாநாயகரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான பி.ஏ.சங்மா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிப்பதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.அவருக்கு ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கும் ஆதரவு தெரிவித்தார்.
சங்மாவுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆதரவு திரட்டினார். இது தொடர்பாக பாரதீய ஜனதா தலைவர் அத்வானி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேசினார். காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிதி மந்திரி பிரணாப்முகர்ஜி அறிவிக்கப்பட்டார்.
ஆனால் காங்கிரசில் உள்ள முக்கிய கூட்டணி கட்சி தலைவரான மம்தா பானர்ஜி பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க மறுத்து அப்துல்கலாமை வேட்பாளராக அறிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் அப்துல்கலாமா? சங்மாவா? என்ற நிலையில் பாரதீய ஜனதா கூட்டணியின் ஆதரவு யாருக்கு என்று முடிவு எடுக்க முடியாமல் திணறியது.
கட்சிகளுக்கிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் அப்துல்கலாம் வேட்பாளராக நிற்க மறுத்து விட்டார். இதனால் சங்மாதான் எதிர்க்கட்சி வேட்பாளர் என்ற முடிவு ஏற்பட்டது. அவரை பாரதீய ஜனதா ஆதரிப்பதாக இன்று அதி காரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டது. பாரதீய ஜனதா தலை வர்கள் சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி ஆகியோர் டெல்லியில் இன்று கூட்டாக இந்த முடிவை அறிவித்தனர்.
இது தொடர்பாக சுஷ்மா சுவராஜ் கூறியதாவது:-
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் பாரதீய ஜனதா ஆலோசனை நடத்தியது. இதில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.
கூட்டணி தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்துல்கலாம் போட்டியிட மறுத்துவிட்ட நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியும், சிவசேனாவும் காங்கிரஸ் வேட்பாளர் பிரணாப்முகர்ஜியை ஆதரிக்கும் நிலையை எடுத்தன.
பிரணாப் முகர்ஜியை ஆதரிக்குமாறு காங்கிரஸ் எங்களிடம் கேட்டது. ஆனால் வேட்பாளரை தேர்வு செய்யும்போது எங்களிடம் எந்த கருத்தும் கேட்கவில்லை. தன்னிச்சையாக வேட்பாளரை தேர்வு செய்து விட்டு எங்களிடம் கேட்டால் எப்படி ஆதரவு கொடுக்க முடியும்.
பாரதீய ஜனதா முக்கிய எதிர்க்கட்சியாக விளங்குகிறது. எங்களுடன் காங்கிரஸ் ஆலோசிக்காமல் மீறிச் செயல்பட்டுள்ளது. பிரணாப் முகர்ஜி நாட்டுக்கு என்ன செய்தார் என்று ஆலோசனை நடத்தினோம். குறிப்பிட்டு சொல்லும்படி அவர் எதுவும் செய்யவில்லை.
எனவே பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு இல்லை என்ற முடிவை பாரதீய ஜனதா எடுத்துள்ளது. இப்போதைய நிலையில் பிரணாப் முகர்ஜிக்கு எதிராக தேர்தலில் போட்டி இருக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கருதுகிறது.
இதனால் சங்மாவை ஆதரிப்பது என்று முடிவு எடுத்துள்ளோம்.
சங்மாவுக்கு ஆதரவாக மம்தா பானர்ஜியையும் சேர்க்க முயற்சி செய்வோம். ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்யும்போது தேவையில்லாமல் பிரதமர் வேட்பாளர் பிரச்சினையை நிதிஷ்குமார் கிளப்பியது துரதிர்ஷ்டவசமானது.
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தேர்வில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இடையே பிளவு ஏற்பட்டாலும் மற்ற பிரச்சினையில் எங்களிடையே பிளவு இல்லை. எனவே கூட்டணி கட்சிகளை தொடர்ந்து அனுசரித்து செல்வோம்.
இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.
அருண்ஜெட்லி கூறுகையில், ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதாவும் பங்குகொள்ள வேண்டும் என்பதற்காக சங்மாவை ஆதரிக்கிறோம். இதன்மூலம் ஜனநாயகத்தையும், ஒருமைப்பாட்டையும் காத்து வருகிறோம். தொடர்ந்து முதன்மையான எதிர்க்கட்சியாக பாரதீய ஜனதா இருக்கும் என்றார்.
பாரதீய ஜனதா முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதன் மூலம் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் இருந்த திரை விலகி பிரணாப்முகர்ஜிக்கும், சங்மாவுக்கும் இடையே நேரடி போட்டி உருவாகி உள்ளது.
சுஷ்மாசுவராஜ் அறிவிப்பின் மூலம் ஐக்கிய ஜனதா தளமும், சிவசேனாவும் கூட்டணியில் இருந்து பிரிந்து விட்டன. கம்யூனிஸ்டு கட்சிகள் யாரை ஆதரிப்பது என்று முடிவு செய்வதற்காக டெல்லியில் இன்று மாலை 4 மணிக்கு உயர்மட்டக்குழு கூட்டம் நடக்கிறது.
மம்தா பானர்ஜியும் தனது ஆதரவு யாருக்கு என்பதை இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனக்கு ஆதரவு தருவதாக அறிவித்த பாரதீய ஜனதாவுக்கு சங்மா நன்றி தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:-
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. எனக்கு பாரதீய ஜனதா ஆதரவு அளித்து இருப்பது மகிழ்ச்சி அளித்து இருக்கிறது. இதற்காக அந்த கட்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏற்கனவே எனக்கு ஆதரவு தெரிவித்து இருந்த அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம் கட்சிகளுக்கும் நன்றி. மம்தா பானர்ஜியும் எனக்கு ஆதரவு கொடுப்பார் என்று நம்புகிறேன். எனது மகள் மத்திய மந்திரியாக இருக்கிறார். அவர் எடுக்கும் முடிவில் நான் தலையிட மாட்டேன்.
இவ்வாறு சங்மா கூறினார்.
No comments:
Post a Comment