சேலம் அங்கம்மாள் காலனி பிரச்சினையில் தி.மு.க. வை சேர்ந்த முன்னாள் மந்திரி வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார், அவரை மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மத்தியமந்திரி ஜெகத்ரட்சகன் உள்பட பலர் சந்தித்துபேசினர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேலம் போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்தனர். இதற்கான உத்தரவு அவரிடம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி இன்று வேலூர் ஜெயிலுக்கு சென்று வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்து பேசினார். பிற்பகல் 12.10 மணிக்கு அவர் வேலூர் ஜெயிலுக்குள் சென்றார், அவருடன் ராசாத்திஅம்மாள் வேலூர் தி.மு.க. செயலாளர் காந்தி சென்றனர்.
ஜெயில் வாசலில் கனிமொழியை தி.மு.க. வினர் வரவேற்றனர். வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்துவிட்டு வெளியே வந்த கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு தி.மு.க. தலைவர்கள் மீது வழக்கு தொடருவதும் கைது செய்யபடுவதும் தொடர்கிறது. 3-வது முறையாக வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். மனிதாபிமானமற்ற வகையில் ஒவ்வொரு சிறையாக மாற்றப்பட்டு அவரை அலைக்கழித்து வருகின்றனர்.
அவருடைய உடல்நிலைப் பற்றி கவலைபடாமல் மிகமோசமாக நடத்துகின்றனர். அவர் எதற்கும் அஞ்சாதவர் தைரியமாக இருக்கிறார் புழல் சிறையில் இருந்தபோது அவரை கருணாநிதி பார்க்க கூடாது என்பதற்காக தான் அவரை திடீரென வேலூர் ஜெயிலுக்கு மாற்றினர்.
வீரபாண்டி ஆறுமுகம் பதவியில் இருந்த போதும் தற்போது ஜெயிலில் இருக்கும் போதும் ஒரே மனநிலையில் தான் உள்ளார். தி.மு.க. தலைவர்கள் மீது வழக்கு போடுவது குறித்து ஆராய்ச்சி செய்து வருவதுதான் அ.தி.மு.க. ஆட்சியின் சாதனையாக உள்ளது.மக்களை பற்றி சிந்திக்காமல் ஓய்வெடுக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா செல்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
வீரபாண்டி ஆறுமுகத்தை சந்திக்க அவரது குடும்பத்தினர் ஜெயிலுக்கு வெளியே காத்திருந்தனர். அவர்களுக்கு கனிமொழி எம்.பி. ஆறுதல் கூறினார். அப்போது அவர்கள் கண்கலங்கினர்.

No comments:
Post a Comment