குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவை ஆதரிக்கும் முடிவில் மாற்றம் ஏதும் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
கொடநாடு செல்லும் முன்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, சங்மாவை ஆதரிக்கும் தங்களது முடிவில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. குடியரசுத் தலைவர் தேர்தலில் இருந்து அப்துல்கலாம் விலகிவிட்டதால் அவரைப் பற்றி விவரிக்கத் தேவையில்லை சங்மாவை தமது கட்சி முன்னிறுத்திய போதே பல கட்சிகளும் தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்தன. மற்ற கட்சிகளும் சங்மாவை ஆதரித்தால் மகிழ்ச்சிதான் என்றார்.
மேலும் சங்மாவை திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜியும் ஆதரிக்கக் கூடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பி.ஏ.சங்மாவை அதிமுகவும், பிஜூ ஜனதா தளமும் முன்னிறுத்தியுள்ளன. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பி.ஏ.சங்மாவை ஆதரிக்கக் கூடிய நிலை உருவாகி உள்ளதால் குடியரசுத் தலைவர் தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது.

No comments:
Post a Comment