குடியரசுத் தலைவர் தேர்தலை மையமாக வைத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது அரசியல் விளையாட்டை துவக்கியுளள்ளார்.
குடியரசுத் தலைவர் வரும் ஜூலை மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தேர்தலை தேமுதிக புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களுக்கு இடையே பிரச்சனைகள் ஏற்பட்டால் அதை நியாயமாக தீர்க்கத் தான் மத்திய அரசு உள்ளது. ஆனால் தமிழக மக்களை பாதிக்கும் பிரச்னைகளை மத்திய அரசு இது வரை கண்டுகொள்ளவில்லை. தமிழக நலன் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கவும் முன் வரவில்லை. சீனர்கள் ஆட்சி நடத்தும் சிங்கப்பூரில் கூட ஆட்சி மொழியாக தமிழ் உள்ளது.ஆனால் இந்தியாவில் இன்னும் தமிழ் ஆட்சி மொழியாகவில்லை.
தமிழகமும், தமிழர்களும், தமிழும் கடந்த காலங்களில் மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. தமிழகத்தில் தீராத பிரச்சனைகள் பல இருந்தும் அவற்றை தீர்க்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில் யார் குடியரசுத் தலைவராக வந்தாலும் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. எனவே குடியரசுத் தலைவர் தேர்தலில் கலந்து கொள்ளாமல் இருப்பதே தமிழகத்திற்கு செய்யும் நன்மையாகும்.
எங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிக்க தேமுதிக முடிவு செய்துள்ளது என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அவரது அறிக்கை காங்கிரஸ் கட்சியை தாக்குவது போல இருந்தாலும், அவர் தந்திரமாகவே காய் நகர்த்தியுள்ளார். புதுக்கோட்டை இடைத்தேர்தலில் டொபசிட் பெற்ற தேமுதிக சற்று தெம்பாகவே உள்ளது.
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அதிமுக தலைமையிலான அணி சங்மாவை ஆதரித்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் பிரதான எதிர் கட்சியான பாஜக சங்மாவை ஆதரித்துள்ளது. தேமுதிகவிற்கு மொத்தம் 29 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் விஜயகாந்த் குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். விஜயகாந்தின் இந்த அறிவிப்பு அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி குடியரசுத் தலைவர் தேர்தலை தேமுதிக புறக்கணித்தால் அக்கட்சியின் வாக்குகளைக் கேட்டு காங்கிரஸ் கட்சியும், எதிர்க் கட்சியான பாஜகவும் ரகசிய பேரம் நடத்தும். அப்போது தமிழகத்தில் மாநில கட்சியாக உள்ள தேமுதிகவிற்கு ஒரு கெளரவம் கிடைக்கும். தேசிய அளவில் முக்கியத்துவம் கிடைக்கும். அப்படி அனைவரும் தன்னை உற்று நோக்கி நெருங்கி வந்தால், தான் வைக்கும் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என கூற வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும் தனது டெல்லி தொடர்புகளை வலுப்படுத்தவும், பலப்படுத்தவும் இந்த காய் நகர்த்தல் உதவும் என்பது கேப்டன் கணக்கு.
பிறகு ஜனநாயக கடமை ஆற்றுவது ஒவ்வொரு தமிழனின் கடமை என்று கூறி குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக விஜயகாந்த் கடைசி முடிவு எடுக்கலாம். (தெய்வத்தோடு தான் கூட்டணி என்பது போல- அதிமுகவுடன் அல்ல) தன்னை யாரும் அணுகவில்லை என்றாலோ அல்லது தனது நிபந்தனைகளுக்கு ஒத்துவரவில்லை என்றாலோ தான் கூறியபடி நடந்து கொண்டதாக அறிவிக்கலாம். ஆனால் விஜயகாந்த் குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிக்கக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனும், இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜாவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே போல பாஜகவும் தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. சங்மாவுக்கு தேமுதிகவின் ஆதரவை கேட்போம் என பாஜகவின் தேசிய செயலாளர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். விஜயகாந்த் எதிர்பார்த்தபடியே உரிய முக்கியத்துவம் கிடைத்துள்ளது. ஆக, அரசியல் சதுரங்கத்தில் கேப்டன் நகர்த்திய காய் நன்றாக வேலை செய்கிறது.
No comments:
Post a Comment