திருப்பூர் மாவட்ட ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தமிழகத்துக்கு காங்கிரஸ் துரோகம் செய்வதால் ஜனாதிபதி தேர்தலில் எங்களது ஒரே ஒரு வாக்கை காங்கிரசை எதிர்க்க பயன்படுத்துவோம் என்றார்.
மேலும் அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டுக்கு தற்போது ரொம்ப சோதனை காலம். தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களை அண்டை மாநிலங்கள் அழித்து வருகின்றன. தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் முல்லைப்பெரியாறு அணையை உடைத்தே தீருவோம் என கேரள அரசு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி செயல்பட்டு வருகிறது.
அணையை உடைக்க கூடாது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகும் சட்டமன்றத்தில் அணையை உடைப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி அதற்கான முயற்சிகளை செய்து வருகிறார்கள். மேலும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் பாசன உரிமையையும், குடிநீர் ஆதாரத்தையும் அழிக்கும் வகையில் பாம்பாறு மற்றும் அதன் துணை ஆறுகளில் `இடுக்கி பேக்கேஜ்' என்ற பெயரில் 7 தடுப்பணை கட்ட கேரள அரசு முடிவு செய்துள்ளது.
பவானி ஆற்றிலும் அட்டப்பாடி பகுதியில் அணை கட்ட முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் லட்சக்கணக்கான ஏக்கர் பாசன நிலங்கள் வறண்டு போகும். கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ம.தி.மு.க. தொடர்ந்து போராடி வருகிறது.
நமது மாநிலத்துக்கு 4 பக்கமும் கேடு விளைவிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. உலகில் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு செல்லும் ஆற்றில் அணை கட்ட யாருக்கும் உரிமை கிடையாது. ஆனால் இங்கு ஒரு நாட்டில் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும் தண்ணீரை தடுக்க முயற்சிக்கிறார்கள். இதை மத்திய அரசு தடுக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் மத்திய அரசின் பாராமுகப்போக்கு கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே கேரளத்தில் இருந்து மருத்துவக்கழிவுகள், நச்சுக்கழிவுகளை தமிழகத்தில் கொட்டுகிறார்கள். இதை தடுக்க ம.தி.மு.க. போராடி வருகிறது. கேரளாவில் இருந்து 2 ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் கடலில் வீணாக கலக்கிறது. அந்த தண்ணீர் கேரளாவுக்கு தேவையில்லை. அதில் தான் உணவுப்பொருட்களை விளைவித்து கேரளாவுக்கு வழங்குகிறோம். வம்புக்கு அணை கட்ட போவதாக கூறுகிறார்கள். அணை கட்டும் முயற்சியை கைவிடா விட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.
சோனியா காந்தி இயக்குகிற காங்கிரஸ் அரசு தமிழர்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது. ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இந்திய அரசு தான் போரை நடத்தியது. ஈழத்தமிழர்கள் அழிவுக்கு மத்திய அரசில் பங்கேற்றுள்ள தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தான் பொறுப்பாகும்.
இதே போக்கு நீடித்தால் இந்திய அரசின் ஒருமைப்பாடு என்பது காணல் நீராகிவிடும். `இடுக்கி பேக்கேஜ்' திட்டத்தை தடுக்க கோரி வருகிற 24-ந் தேதி திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்துகிறோம். செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் விழாவை நூற்றாண்டு விழாவாக கொண்டாடுவோம். அன்று கரூரில் ம.தி.மு.க. மாநாடு நடைபெறும்.
மேற்கண்டவாறு வைகோ கூறினார்.
No comments:
Post a Comment