சென்னை பல்கலைக் கழக பதிவாளர், தேர்வு முறைகேடு தொடர்பாக பதவி நீக்கம் செய்யப் பட்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற பி.இ., பி.டெக். மற்றும் தொலைதூரக் கல்விக்கான தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன.
இப்பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு படித்து, பெயிலான 200-க்கும் மேற்பட்டவர்கள் கடந்த ஆண்டு மறுதேர்வு எழுதி தேர்ச்சி பெற்றனர். இது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தணிக்கையால் தேர்வு நடத்தியதில் முறைகேடு நடந்திருப்பது உறுதியானது. இதுபற்றி விசாரணை நடத்த 2011-ல் கல்வியாளர் எஸ்.கருணாநிதி தலைமையில் கமிஷன் அமைத்து துணை வேந்தர் ஜி.திருவாசகம் உத்தரவிட்டார்.
அந்த குழு விசாரணை நடத்தி இந்த முறைகேட்டில் 30 ஊழியர்களுக்கு சம்பந்தம் இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தது. பின்னர் கே.சுப்புராஜ் தலைமையில் மற்றொரு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி, முந்தைய கமிட்டியின் கண்டுபிடிப்புகளை அங்கீகரித்ததுடன், பதிவாளர் டி. லியோ அலெக்சாண்டர் உள்பட 21 பேரை கூடுதலாக அறிக்கையில் சேர்த்தது.
முறைகேடு நடைபெற்றதாக சொல்லப்படும் காலத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக லியோ அலெக்சாண்டர் பதவி வகித்தார். இதையடுத்து பதிவாளர் மற்றும் தவறு இழைத்த ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதுபற்றி விவாதிக்க பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்வு முறைகேடு தொடர்பாக கமிஷன் தாக்கல் செய்த அறிக்கை ஏற்றுக் கொள்ளப் பட்டது. இதைத் தொடர்ந்து பதிவாளர் பதவியில் இருந்து லியோ அலெக்சாண்டரை நீக்கி, பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
No comments:
Post a Comment