Monday, January 19, 2015

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டி: டிவில்லியர்ஸ் புதிய உலக சாதனை


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் 31 பந்துகளில் சதம் அடித்து புதிய சரித்திரம் படைத்திருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதன் 2-வது ஒரு நாள் போட்டி ஜோகன்னஸ்பர்க் நியூ வான்டரஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் அம்லாவும், ரிலீ ரோசவும் இணைந்து 247 ரன்கள் திரட்டி அசத்தினர். தொடக்க விக்கெட்டுக்கு தென்ஆப்பிரிக்க ஜோடி எடுத்த அதிகபட்ச ரன் இதுதான். இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக தென்ஆப்பிரிக்காவின் கேரி கிர்ஸ்டனும், கிப்சும் 235 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. முதலாவது சதத்தை சுவைத்த ரோசவ் 128 ரன்களில்(115 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறியதும், 39-வது ஓவரில் கேப்டன் டிவில்லியர்ஸ் களம் புகுந்தார்.

சூறாவளி போல் களத்தில் மையம் கொண்ட டிவில்லியர்ஸ், அதிரடியில் திக்குமுக்காட வைத்தார். சகட்டு மேனிக்கு சிக்சர் மழை பொழிந்து ரசிகர்களை பரவசப்படுத்தினார். அனுபவமற்ற எதிரணி கேப்டன் ஜாசன் ஹோல்டரின் இரு ஓவர்களில் 6 சிக்சர், வெய்ன் சுமித்தின் ஒரே ஓவரில் 4 சிக்சர் என்று வாணவேடிக்கை காட்டினார். அவரை கட்டுப்படுத்த முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் விழிபிதுங்கி நின்றது மட்டுமே மிஞ்சம்.

பின்னியெடுத்த டிவில்லியர்ஸ் வெறும் 31 பந்துகளில் செஞ்சுரி போட்டு வரலாற்று புத்தகத்தை திருத்தி எழுதினார். இதற்கு முன்பு கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சனின் 36 பந்துகளில் சதம் கண்டதே அதிவேக சதமாக இருந்தது. அதை மிக எளிதாக டிவில்லியர்ஸ் தகர்த்தெறிந்தார். அதன் பிறகும் அவரது ருத்ரதாண்டவம் அடங்கவில்லை. 2 பந்து மீதம் இருக்கையில் டிவில்லியர்ஸ் 149 ரன்களில் (44 பந்து, 9 பவுண்டரி, 16 சிக்சர்) கேட்ச் ஆனார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுக்கு 439 ரன்களை குவித்தது. தனது 18-வது சதத்தை பூர்த்தி செய்த அம்லா 153 ரன்களுடன் (142 பந்து, 14 பவுண்டரி) களத்தில் நின்றார்.

பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 291 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 148 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. ஏற்கனவே முதலாவது ஆட்டத்திலும் வெஸ்ட் இண்டீஸ் தோற்றிருந்தது. 


No comments:

Post a Comment