Friday, January 23, 2015

ராஜதந்திரங்களைக் கரைத்துக் குடித்தவர் சவூதி அரேபியாவின் புதிய மன்னர்: சிறப்பு பார்வை

ராஜதந்திரம் மற்றும் மத்தியஸ்தப் பேச்சுக்களில் கில்லாடி புதிய சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சாத். 

மேலும் சவூதியின் மிகுந்த அனுபவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவரும் கூட. கடந்த 50 வருடங்களாக ரியாத் கவர்னராக இருந்தவர். மேலும் அரச குடும்பத்திற்குள் ஏதாவது சர்ச்சை ஏற்பட்டால் இவர்தான் மத்தியஸ்தம் பேசி சரி செய்து வைப்பாராம். 

79 வயதாகும் சல்மான், தனது ஒன்று விட்ட சகோதரரும், மன்னருமான அப்துல்லாவின் மறைவுக்குப் பின்னர் மன்னர் பொறுப்புக்கு வந்துள்ளார். ஆனால் மன்னர் அப்துல்லாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தபோதே கடந்த ஒரு வருடமாகவே அவர் மன்னரின் கடமைகளை நிறைவேற்ற ஆரம்பித்து விட்டாராம். தனது 90வது வயதில் இன்று அதிகாலை மன்னர் அப்துல்லா மரணமடைந்தார். 

2011ம் ஆண்டு முதல் சல்மான் சவூதி பாதுகாப்பு அமைச்சராக இருந்து வந்தார். ராணுவத் தலைமையும் இவரிடமே இருந்தது. சிரியா மீது 2014ல் நடந்த அமெரிக்கா தலைமையிலான ராணுவத் தாக்குதலில் சவூதி ராணுவமும் பங்கேற்றிருந்தது.

 இக்கட்டான நிலையில் 

சவூதியில் முன்பு போல நிலைமை இல்லை. இளைய சமுதாயம் பல்வேறு உரிமைகளைக் கேட்டு போராடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பெண்கள் பல்வேறு வகையான உரிமைகளுக்காக பகிரங்கமாக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். 

இந்த முக்கியாமான காலகட்டத்தில் சவூதி மன்னர் பொறுப்புக்கு வந்துள்ளார் சல்மான். எனவே அவருக்கு முன்புள்ள சவால்கள் அதிகமாகும். 

உடல் நலம் 

அதேசமயம், புதிய மன்னரின் உடல் நிலையும் கூட பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அவருக்கு ஏற்கனவே ஒருமுறை பக்கவாதம் வந்துள்ளது. இதனால் அவரது இடது கையை அதிக அளவில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. 

ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள்

 மறைந்த மன்னர் அப்துல்லா தனது காலத்தில் நாட்டை நவீனமாக்க பல நடவடிக்கைகளை எடுத்தவர் ஆவார். மேலும் பல்வேறு வகையான சீர்திருத்தங்களையும் அவர் படிப்படியாக மேற்கொள்ள உறுதி பூண்டிருந்தார். கல்வியை மேம்படுத்துவது அதில் ஒன்றாகும். 

மேலும் பெண்களுக்கான உரி்மைகளை படிப்படியாக வழங்கவும் அவர் உறுதி பூண்டிருந்தார். தற்போது இந்த நடவடிக்கைகளை புதிய மன்னர் சல்மானும் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 மன்னரின் 7வது பிள்ளை

 சவூதி அரேபியாவை நிறுவியவரான மறைந்த மன்னர் அப்துல் அஜீஸ் அல் சாத் - ஹுஸ்ஸா பின்ட் அகமது சுடேரி தம்பதியின் 12 பிள்ளைகளில் ஒருவர்தான் சல்மான். 

அப்துல் அஜீஸுக்கு பல்வேறு மனைவியர் மூலம் 50க்கும் மேற்பட்ட பிள்ளைகள் உண்டு. அதில் ஒரு மனைவிதான் ஹூஸ்ஸா பின்ட் அகமது சுடேரி. ஹூஸ்ஸாவின் 7வது பிள்ளையாக பிறந்தவர் சல்மான்.

 சமரசம் என்றால் சல்மான் தான் 

அல் சாத் குடும்பத்திற்குள் பல்வேறு பிரச்சினைகள் வந்த போதும் அரச குடும்பத்தின் கவுரவம் மற்றும் அரசின் ஸ்திரத்தன்மையைக் கருத்தில் கொண்டு பிரச்சினை வெளியில் தெரியாமல், வராமல் பார்த்துக் கொள்வார்கள். 

மேலும் குடும்பத்திற்குள் ஏதாவது பிரச்சினை என்றால் சல்மான்தான் புகுந்து சமரசத்தை ஏற்படுத்துவாராம். 

அனைவருடனும் நல்லுறவு 

மேலும் சவூதியில் உள்ள பல்வேறு பழங்குடியினப் பிரிவு சமூகத்தாருடன் சல்மானுக்கு நல்ல தொடர்புகள் உள்ளன. மேலும் பல்வேறு குடும்ப வர்த்தகங்களிலும் சல்மான் பங்கெடுத்துள்ளார். 

ரியாத்தை ஜொலிக்க வைத்தவர் 

1963ம் ஆண்டு அவர் ரியாத் கவர்னராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் தனித்து விடப்பட்ட பாலைவன நகராக அறியப்பட்ட ரியாத்தை சொர்க்கபுரியாக மாற்றிக் காட்டியவர் சல்மான்தான். 

வானுயர்ந்த கட்டடங்கள், பல்கலைக்கழகங்கள், மேற்கத்திய உணவகங்கள் என்று இன்று ரியாத் மாடர்ன் நகராக மிளிர்கிறது. ரியாத் நகரை முழுமையாக நிமிர வைத்து சிறந்த நகரமாக மாற்றியதால் உலக அளவிலும் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது.

 பல்வேறு நாட்டு தலைவர்கள், தூதர்களுடனும் இவருக்கு நல்ல தொடர்பு உள்ளது. இவரது மூத்த சகோதரரான நயீப்தான் மன்னராகியிருக்க வேண்டும். ஆனால் நயீப் மரணமடைந்து விட்டதால் சல்மானை பட்டத்து இளவரசராக மன்னர் அப்துல்லா 2011ம் ஆண்டு அறிவித்தார். 

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை 

2007ம் ஆண்டு சவூதியில் உள்ள அமெரிக்க தூதரகம், தனது நாட்டு வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பிய ஒரு கடிதத்தில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது... தீவிரவாதத்தை வெறுப்பவர் சல்மான். 

ஆனால், யூத மற்றும் கிறிஸ்தவ தீவிரவாதம்தான், இஸ்லாமிய தீவிரவாதம் வளர முக்கியக் காரணம். ஒரு நாள் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் வெறுப்பு அலை அப்படியே அமெரிக்காவை நோக்கி திரும்பும். அந்த நாள் நிச்சயம் வரும். 

மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டு வர வேண்டுமானால், இஸ்ரேல், பாலஸ்தீன மோதல் முழுமையாக முடிவுக்கு வர வேண்டும். இஸ்ரேல் உண்மையில் அமெரிக்காவுக்கு மிகப் பெரிய சுமையாகும் என்று கூறியிருந்தார் சல்மான்.


No comments:

Post a Comment