வெளிநாட்டில் உள்ள ரகசிய வங்கிகளில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, அவருடைய கணவரும், மறைந்த முன்னாள் பிரதமருமான ராஜீவ்காந்தி ஆகியோர் பெயர்களில் கறுப்பு பணம் போட்டு வைக்கப்பட்டுள்ளதாக பா.ஜனதா நியமித்த ஒரு குழு அறிக்கை வெளியிட்டது.
இதற்கு மறுப்பு தெரிவித்து, கடந்த 15-ந் தேதி, பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானிக்கு சோனியாகாந்தி கடிதம் எழுதினார். அதையடுத்து, 16-ந் தேதி, சோனியா காந்தியிடம் வருத்தம் தெரிவித்து அத்வானி கடிதம் எழுதினார்.
இந்நிலையில், கடந்த 15-ந் தேதி, அத்வானிக்கு சோனியா காந்தி எழுதிய கடித விவரம் வெளியாகியுள்ளது. அதில் சோனியாகாந்தி,
’’பா.ஜனதாவால் நியமிக்கப்பட்ட ஒரு குழு, `வெளிநாட்டு ரகசிய வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பணம்' என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டு இருப்பது, எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அதில், என் மீதும், என் கணவர், தாயார் உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.
இத்தகைய பொய்கள், அவ்வப்போது சில பத்திரிகைகளாலும், சில கட்சிகளாலும் சொல்லப்பட்டு வருகின்றன. அவற்றையெல்லாம் வெறும் அவமதிப்பாகவே நான் கருதி வந்துள்ளேன்.
ஆனால், அந்த புத்தகம், தங்கள்(அத்வானி) தலைமையில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியிலும், பா.ஜனதாவிலும் முக்கிய பதவிகள் வகிக்கும் தங்களைப் போன்ற அந்தஸ்து பெற்ற தலைவர், இத்தகைய தீயநோக்கமுள்ள கட்டுக்கதைகளை ஆதரிப்பதை அறிந்து நான் வியப்பும், ஏமாற்றமும் அடைந்தேன்’’ என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment