பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான மலேசியா வாசுதேவன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70.
தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த பாடகர்களுள் ஒருவர் மலேசியா வாசுதேவன். எவ்வளவு கடினமாக பாடலையும் அழகாகப் பாடிய அசாத்திய திறமைசாலி. இவரது தமிழ் உச்சரிப்பு அட்சர சுத்தமாக இருக்கும்.
மலேசியாவில் பிறந்த இவர், சினிமா வாய்ப்புக்காக சென்னை வந்தார். எம்எஸ் விஸ்வநாதன் இசையில் டெல்லி டு மெட்ராஸ் படத்துக்காக முதல் பாடல் பாடினார். ஆனாலும் அவருக்கு பெரிதாக அப்போது வாய்ப்புகள் இல்லை.
இசைஞானி இளையராஜாதான் மலேசியா வாசுதேவனுக்கு மிகப் பெரிய வாய்ப்பை வழங்கினார், தான் இசையமைத்த பதினாறு வயதினிலே படத்தில். கவியரசு கண்ணதாசனின் 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு..' என்ற அந்தப் பாடல் ஒரே இரவில் வாசுதேவனை முன்னணிப் பாடகராக்கியது.
அதன் பிறகு ஏராளமான படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடினார். கோடைகால காற்றே, அள்ளித் தந்த பூமி, அடியாடு பூங்கொடியே, தங்கச் சங்கிலி என அவர் பாடிய மெலடிப் பாடல்கள் காலத்தால் அழியாதவை.
ரஜினி - கமல் இருவரின் படங்களுக்கும் தொடர்ந்து பாடியவர் மலேசியா வாசுதேவன். குறிப்பாக ரஜினிக்கு இவர் குரல் பொருத்தமாக இருந்ததால், அவர் படங்களில் 'அருணாச்சலம்' வரை தொடர்ந்து பாடி வந்தார்.
85 திரைப்படங்களில் நடித்துள்ளார் மலேசியா வாசுதேவன். முதல்வசந்தம், ஒரு கைதியின் டைரி, ஊர்க்காவலன், ஜல்லிக்கட்டு என வெற்றிப்படங்கள் பலவற்றில் வில்லனாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.
தமிழக அரசின் கலைமாமணி விருதினையும் பெற்றுள்ளார்.
புதிய பாடகர்களின் வரவு மற்றும் அவரது உடல்நிலை காரணமாக சில ஆண்டுகளாக அவரால் பாட முடியவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சைப் பலனின்றி இன்று பகல் 1 மணிக்கு மரணமடைந்தார்.
மலேசியா வாசுதேவன் மறைவுக்கு தமிழ்த் திரையுலகம் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.
அவருக்கு மனைவியும், யுகேந்திரன் என்ற மகனும், பிரசாந்தினி என்ற மகளும் உள்ளனர். யுகேந்திரன் நடிகராகவும் பின்னணிப் பாடகராகவும் உள்ளார். பிரசாந்தினியும் இப்போது பின்னணி பாடி வருகிறார்.
இன்றைய பதிவுகள்...

No comments:
Post a Comment