தேமுதிக தலைவர் விஜயகாந்தை தரக்குறைவாகப் பேசியதாக, நடிகர் வடிவேலு மீது திருவாரூர் நகர காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத் தொடக்க பொதுக் கூட்டம் திருவாரூரில் மார்ச் 23-ம் தேதி இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு. கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் நடிகர் வடிவேலு பேசியபோது, தேமுதிக தலைவர் விஜயகாந்தை மூதேவி, லூஷூ என்று விமர்சித்து பேசினார்.
இது தொடர்பாக தேமுதிகவின் உயர்நிலைக் குழு உறுப்பினர் திலீப்குமார் சென்னையில் உள்ள தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளித்தார்.
இந்தப் புகாரை மாவட்டத் தேர்தல் அலுவலரும், திருவாரூர் மாவட்ட ஆட்சியருமான கா. பாஸ்கரனுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. அந்தப் புகாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஆட்சியர் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. மூர்த்தி உத்தரவின் பேரில், நடிகர் வடிவேலு மீது தனிநபரை தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசுதல், தேர்தல் விதிமுறைகளை மீறி தனி நபரை விமர்சித்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்திய தண்டனைச் சட்டம் 153 (ஏ), 171, 505 2 ஆகிய பிரிவுகளின் கீழ் நகரக் காவல் நிலைய ஆய்வாளர் செல்வம் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
No comments:
Post a Comment