தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு நேற்று பிரசாரம்செய்தார். ஆண்டிப்பட்டியில் பிரசாரத்தை தொடங்கிய அவர் தி.மு.க. வேட்பாளர் எல்.மூக்கையாவை ஆதரித்து பேசினார். பின்பு தேனி நகரில் பெரியகுளம் (தனி) வேட்பாளர் வீ.அன்பழகனை ஆதரித்து பேசினார். பிரசாரத்தின் போது நடிகை குஷ்பு பேசியதாவது:-
தேனி என்றவுடன் மக்களின் சுறுசுறுப்புதான் எனது நினைவுக்கு வருகிறது. கடந்த 4 ஆண்டு காலம் சோம்பேறித்தனமாக எஸ்டேட்டுக்கு போனவர்களுக்கு ஓட்டுப்போட போகிறீர்களா? 87 வயதிலும் தமிழக மக்களுக்கு கஷ்டப்பட்டு உழைக்கும் தலைவர் கருணாநிதிக்கு ஓட்டுப்போட போகிறீர்களா? பெண்கள் அடுப்பூதி கஷ்டப்பட்ட நிலையை மாற்றிட இலவச கியாஸ் சிலிண்டர் கொடுத்தார். அவர் சொல்லாமலேயே இலவச வீடு வழங்கும் திட்டத்தை தொடங்கினார்.
தற்போது மிக்ஸி, கிரைண்டர் தருவதாக தேர்தல் அறிக்கையில் முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். அவர் சொல்லாமலேயே வாஷிங்மிஷின், பிரிட்ஜ் போன்றவற்றையும் தருவார். ஜெயலலிதா கடந்த 4 ஆண்டுகளில் தொகுதி மக்களை பார்க்காமல் கொட நாட்டுக்கு சென்றார். தொகுதி பக்கம் வராத ஜெயலலிதாவை நீங்கள் விரட்டுவீர்கள் என்று பயந்து ஸ்ரீரங்கத்துக்கு ஓடிப்போய் விட்டார்.
தேர்தல் நேரத்தில் அவர் பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கிறார். அவர் கூறும் வாக்குறுதிகளை எப்படி நம்புவது? ஐந்தாண்டு காலம் கூட இருந்த வைகோவை கறிவேப்பிலை போன்று தூக்கி வீசினார். தன்மானம் மிக்க அவர் தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவித்துள்ளார். சுய மரியாதை உள்ளவர்கள் யாரும் அந்த கூட்டணியில் இல்லை.
தி.மு.க. கூட்டணிதான் வலுவாக இருக்கிறது. அந்த அம்மா, முதல்- அமைச்சர் கலைஞரின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துள்ளார். அதிலும் கூடுதலாக வாக்குறுதிகளை அள்ளிவிட வேண்டும் என்ற பெயரில் 4 ஆடு, 2 பசுமாடு வழங்குவதாக கூறியுள்ளார். அதற்கு டாக்டர் ராமதாஸ் பதிலடி கொடுத்து விட்டார். அவர் கூறிய கணக்குப்படி பார்த்தால் 30 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு 2 பசுமாடு வீதம் 60 லட்சம் பசுமாடு தேவைப்படும்.
இந்தியாவிலேயே அந்த அளவுக்கு பசுமாடுகள் இல்லை. மக்கள் சேவைக்கு அடையாளமாக தனது வீட்டையே மருத்துவ மனையாக மாற்றிட முதல்- அமைச்சர் தானம் செய்துள்ளார். அவரின் தேர்தல் அறிக்கையை காப்பி அடிக்கும் ஜெயலலிதா போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டை ஏழை மக்களுக்கு அனாதை ஆசிரமமாக மாற்றிட தானமாக வழங்க முடியுமா? ஜெயலலிதாவுக்கு வாங்க மட்டும்தான் முடியும் கொடுக்க முடியாது. கொடுக்கும் மனது முதல்- அமைச்சருக்கு மட்டுமே உண்டு.
இவ்வாறு நடிகை குஷ்பு பேசினார்.
No comments:
Post a Comment