சாதிக்பாட்சா தற்கொலை வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்காக காத்திருக்கிறோம் என்றும், இந்த வழக்கில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் சென்னை நகர போலீசார் வேண்டுகோள் வைத்தனர்.
சென்னை தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனி 5-வது குறுக்கு தெருவில் வசித்தவர் சாதிக்பாட்சா. ரியல் எஸ்டேட் அதிபரான இவர், ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் ஆவார். ஸ்பெக்டரம் வழக்கில் இவரிடமும் சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தினார்கள். இவரது வீட்டிலும் சி.பி.ஐ போலீசார் சோதனை நடத்தினார்கள்.
இந்த நிலையில்தான் சாதிக்பாட்சா தனது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணையை சென்னை தேனாம்பேட்டை போலீசார் நடத்தினார்கள். இதுவரை அவர்கள் நடத்திய விசாரணை தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர்,
’’இந்த வழக்கு தொடர்பாக தவறான தகவல்கள் செய்தியாக பரப்பப்படுகிறது. முதலில் சாதிக்பாட்சா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பது போல செய்திகள் வந்தன.
பின்னர் தற்கொலை செய்து கொண்டது சாதிக்பாட்சாவா? அவரது உடலை ஆஸ்பத்திரியில் இருந்து வெள்ளை துணியால் மூடி எடுத்துச் சென்றது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்கள். இந்த கேள்வியை அவரது மனைவியோ, அவரது உறவினர்களோ எழுப்பவில்லை.
சாதிக்பாட்சாவே தற்கொலைக்கு நானே பொறுப்பு என்று கடிதம் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து அவரது கையெழுத்துதான் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் அந்த கடித நகல்களை நிபுணர்களின் ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம்.
எங்களது ஆரம்பகட்ட விசாரணையில், சாதிக்பாட்சா தற்கொலை செய்துவிட்டார் என்பதும், அவரது மனைவி மற்றும் இதர உறவினர்கள் சொன்ன தகவல்படி, ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையாலும், அதையொட்டி பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வந்த செய்திகளாலும், சாதிக்பாட்சா மன உளைச்சலுடன் காணப்பட்டார் என்றும் தெரிய வந்தது.
இதுவரை இந்த வழக்கில் சாதிக்பாட்சாவின் மனைவி, மைத்துனர், 2 தம்பிகள், மற்றும் நண்பர்கள், உறவினர்கள் சிலரிடம் விசாரணை நடத்தி உள்ளோம். இந்த விசாரணை விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்களது விசாரணை முடிக்கப்பட்டுவிட்டது.
சாதிக்பாட்சாவின் 2 செல்போன்களும் பத்திரமாக கைப்பற்றப்பட்டு அதில் யார், யார் அவரிடம் பேசினார்கள், அவர் யார், யாரிடம் பேசினார்? என்பது பற்றிய விவரங்களை உரிய செல்போன் நிறுவனங்களிடம் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள விவரங்களை எல்லாம் சி.பி.ஐ. போலீசார்தான் முழுமையாக விசாரிக்க வேண்டும்.
பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை. சாதிக்பாட்சா தற்கொலைக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை சி.பி.ஐ. போலீசார்தான் விசாரித்து கண்டறிய வேண்டும். சாதிக்பாட்சாவின் டிரைவர் ரூ.6 கோடி பணத்துடன் கடந்த ஆகஸ்டு மாதம் தப்பி சென்று விட்டதாகவும், அதுதொடர்பாக அவர் மனஉளைச்சலுடன் காணப்பட்டார் என்பது பற்றி எங்களது விசாரணையில் எந்த தகவலும் இல்லை.
சாதிக்பாட்சாவின் ஆடையில் மர்ம கறை எதுவும் இல்லை. அவர் தற்கொலை செய்தபோது மலம் கழித்துள்ளார். அந்த கறை தான் ஆடையில் இருந்தது.
ஆடைகள் எதுவும் சோதனைக்கு அனுப்பப்படவில்லை. சி.பி.ஐ. விசாரணை கேட்டு தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி விட்டது. இன்னும் ஓரிரு நாளில் மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் சி.பி.ஐ. விசாரணை இந்த வழக்கில் தொடங்கிவிடும். நாங்கள் நடத்திய விசாரணை விவரங்கள் அனைத்தையும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க தயார் நிலையில் வைத்துள்ளோம்’’ என்று கூறினார்.
No comments:
Post a Comment