மதிமுகவின் முடிவினை மறுபரிசீலனை செய்ய வைகோவிற்கு மார்க்சிட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாள ஜி. ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’வரலாறு காணாத ஊழலில் திளைத்து வரும் திமுகவும், காங்கிரசும் கூட்டணி சேர்ந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றன.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும், திமுக தலைமையிலான மாநில அரசும் கடைபிடித்து வரும் தவறான பொருளாதாரக் கொள்கையினால் விலைவாசி உயர்வு, விவசாயத்தில் சரிவு, மின்வெட்டு, தொழில் நலிவு, வேலையின்மை போன்ற பிரச்சனைகளினால் மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.
மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கையை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் மதிமுகவின் பங்களிப்பு முக்கியமானது.
நடக்கவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் ஊழல் கூட்டணியான திமுக - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்துவது என்பது மக்கள் முன்னுள்ள முக்கியமான கடமையாக உள்ளது. இத்தகைய மகத்தானப் போராட்டத்தில் அஇஅதிமுக தலைமையில் தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்ட் பிளாக், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் உள்ளிட்டு பல கட்சிகள் அணிவகுத்து ஓரணியில் நிற்கின்றன.
திமுக - காங்கிரஸ் கூட்டணியை முறியடிப்பதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் முக்கியமான பங்குள்ளது.
இச்சூழலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாடு - புதுவை சட்டமன்ற தேர்தலில்
போட்டியிடப்போவதில்லை என்று எடுத்துள்ள முடிவு வேதனையளிக்கிறது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தனது முடிவை மறுபரிசீலனை செய்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அணியோடு இணைந்து, ஊழலில் திளைத்து வரும் திமுக - காங்கிரஸ்கூட்டணியை வீழ்த்திடும் ஜனநாயகப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மதிமுக தலைமைக்கு வேண்டுகோள் விடுக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment