தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட 234 தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 280 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளிலும் 387 பேர் மனு செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடந்தது. மயிலாப்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி தங்கபாலு மனு செய்தார்.
அ.தி.மு.க. சார்பில் வக்கீல் ராஜலட்சுமி, பா.ஜ.க. சார்பில் வானதி சீனிவாசன் உள்பட மொத்தம் 32 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். தங்கபாலு தன் மனைவியையே வேட்பாளர் ஆக்கியதால் மயிலை காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் கிளம்பியது. தென்சென்னை மாவட்ட மகளிர் அணி செயலாளர் சிவகாமி காங்கிரஸ் போட்டி வேட்பாளராக களம் இறங்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் 32 பேரின் மனுக்கள் இன்று காலை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மயிலாப்பூர்-திருவல்லிக்கேணி தாசில்தார் அலுவலகத்தில் வைத்து பரிசீலிக்கப்பட்ட போது திடீர் திருப்பம் ஏற்பட்டது. அதிகாரப்பூர்வ காங்கிரஸ் வேட்பாளர் ஜெயந்தி தங்கபாலு மீது பல்வேறு புகார்களை போட்டி வேட்பாளர் சிவகாமி கூறினார். இது தொடர்பாக அவர் தேர்தல் அதிகாரி இன்ன சன்ட் திவ்யாவிடம் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ள ஜெயந்தி தங்கபாலு தனது மனுவில் சர்ச்சைக்குரிய தகவல்களையும், பல முக்கிய உண்மைகளையும் வேண்டும் என்றே மறைத்து விட்டார். மெகா டி.வி. எனும் தொலைக்காட்சி ஜெயந்தி தங்கபாலு பெயரில்தான் இயங்குகிறது. அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக அவர் உள்ளார். ஆனால் மனுவில் ஜெயந்தி இந்த தகவல்களை குறிப்பிட வில்லை.
தங்கபாலு சில தினங்களுக்கு முன்பு தொலைக் காட்சிகளில் பேட்டியளித்த போது, மெகா டி.வி.க்கு என் மனைவிதான் நிர்வாக இயக்குனர் என்று கூறி இருந்தார். ஆனால் மனுவில் இந்த உண்மையை ஜெயந்தி மறைத்து மோசடி செய்துள்ளார். மெகா டி.வி.யில் ஜெயந்திக்கும், அவர் குடும்பத்தினருக்கும் உள்ள பங்குகள் மற்றும் விபரங்கள் தொடர்பான தகவல்களும் வேட்புமனுவில் குறிப்பிடப்படவில்லை.
இது தவிர ஜெயந்தி தங்கபாலு மீது சென்னை ஐகோர்ட்டிலும், மத்திய குற்றப்பிரிவு போலீசிலும் 2 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவை பற்றிய தகவல்களையும் ஜெயந்தி தங்கபாலு தனது மனுவில் குறிப்பிடாமல் வேண்டும் என்றே திட்டமிட்டு மறைத்து உள்ளார். அந்த 2 கிரிமினல் வழக்குகளும் ராஜ் டி.வி. மூலம் தொடரப்பட்ட வழக்குகளாகும். இந்த 2 கிரிமினல் வழக்குகளும் காப்புரிமை சட்டத்தை மீறியதற்காக நடந்து வருகிறது.
ஐகோர்ட்டில் உள்ள வழக்கு 2009-ம் ஆண்டில் இருந்தும், மத்திய குற்றப்பிரிவில் உள்ள கிரிமினல் வழக்கு 30.1.2010ல் இருந்தும் நிலுவையில் இருக்கிறது. சென்னை பள்ளிக் கரணையில் உள்ள தங்க வேலு பொறியியல் கல்லூரி ஜெயந்தி தங்கபாலுக்கு சொந்தமானதாகும். இந்த கல்லூரியில் அவர் பல கோடி ரூபாயை முதலிடு செய்துள்ளார். ஆனால் தன் பெயரில் கல்லூரி இருப்பதை ஜெயந்தி தங்கபாலு தன் மனுவில் குறிப்பிடவில்லை. மேலும் பள்ளிக்கரணையில் ஜெயந்தி பெயரில் சொத்து உள்ளது. அந்த சொத்து மதிப்பை மிகவும் குறைத்து காட்டி உள்ளார். அந்த சொத்து மதிப்பு வெறும் 7 லட்சம் ரூபாய் என்பது திட்டமிட்ட தவறான தகவலாகும்.
ஜெயந்தி தங்கபாலு தேர்தல் கமிஷனை ஏமாற்றும் வகையில் திட்டமிட்ட நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார். இந்த தவறான தகவல்கள் வாக்காளர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாதபடி உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவரது மனு தகுதியற்றது. எனவே உண்மையான தகவல்களை மறைத்த ஜெயந்தி தங்கபாலு மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடாதபடி, அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் வக்கீல் சிவகாமி கூறிஇருந்தார்.
பா.ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசன் தரப்பிலும் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயந்தியின் மனுவை ஏற்க எதிர்ப்பு தெரிவித்தார். ஜெயந்தி தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திர விதிமுறைப்படி தாக்கல் செய்யப்படவில்லை. மெகா டி.வி.யின் நிர்வாக இயக்குனராக இருப்பதையும், கல்வி நிறுவனங்களின் அறங்காவலராக இருப்பதையும் மறைத்துள்ளார். சொத்து மதிப்பும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்தார்.
ஜெயந்தி தங்கபாலு மீது ஆதாரங்களுடன் புகார்கள் கூறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜெயந்தி தனது வேட்புமனுவுடன் இரண்டு முக்கிய ஆவணங்களை இணைக்கவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. எனவே ஜெயந்தி தங்க பாலுவின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி இன்ன சன்ட் திவ்யா ஏற்கவில்லை. ஜெயந்தி மனு தள்ளுபடி ஆகிறது. இன்று பிற்பகல் இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். ஜெயந்தி தங்கபாலுக்கு மாற்று வேட்பாளராக தங்கபாலு வேட்புமனு செய்துள்ளார். அவரது மனு ஏற்கப்பட்டுள்ளது. எனவே மயிலாப்பூர் தொகுதியில் அதிகாரப்பூர்வ காங்கிரஸ் வேட்பாளராக தங்கபாலு போட்டியிடுவார்.
இதுகுறித்து தங்க பாலு நிருபர்களிடம் கூறியதாவது:-
மயிலாப்பூர்-திருவல்லிக்கேணி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஜெயந்தி தங்கபாலு அறிவிக்கப்பட்டார். அதன் அடிப்படையில் மயிலாப்பூர் தி.மு.க. பகுதி செயலாளர் வேலு, பா.ம.க. தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜமுனா, தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மங்கள்ராஜ், விடுதலை சிறுத்தைகள் செயலாளர் இளஞ்செழியன் முன்னிலையில் தேர்தல் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதை சரி பார்த்த தேர்தல் அதிகாரி 4 மனுக்களும் சரியாக இருப்பதாக கூறினார். தற்போது 2 மனுக்களை காணவில்லை. 2 இடங்களில் வேட்பாளர் கையெழுத்து போடவில்லை என்று கூறுகிறார்.
மனு தாக்கல் செய்தபோது சரியாக இருப்பதாக கூறி விட்டு, இப்போது சரியில்லை என்று அதிகாரி கூறுவது ஏற்க கூடியது அல்ல. இதுகுறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் செய்வேன். எனது மனைவி ஜெயந்தி தங்கபாலு மீது வழக்குகள் இருப்பதாக வதந்தி பரப்புகிறார்கள். அதில் எந்தவித உண்மையும் கிடையாது. அவர் மீது எந்த வழக்கும் தொடரப்படவில்லை. எந்த வழக்கும் நிலுவையிலும் இல்லை. மாற்று வேட்பாளராக நான் மனுதாக்கல் செய்து இருக்கிறேன். அந்த மனு ஏற்கப்பட்டுள்ளது. எனவே காங்கிரஸ் சார்பில் இந்த தொகுதியில் வேட்பாளர் போட்டியிடுவது உறுதி.
இவ்வாறு தங்கபாலு கூறினார்.
No comments:
Post a Comment