திருவாரூரில் நடந்த திமுக கூட்டணியின் தேர்தல் பிரச்சார மேடையில் வடிவேலுவின் ஏச்சும் பேச்சும் விஜயகாந்தை நோக்கியே இருந்தது. அந்த பேச்சை கேட்டவர்கள் அத்தனை பேருக்கும் ஒரு கேள்வி மட்டும் மனதில் தோன்றியிருக்கும். இரண்டு பேருக்கும் நடுவே முன் ஜென்மத்துலேர்ந்தே பகை இருந்திருக்குமோ?
நாம் விசாரித்த வரையில் அது முன்ஜென்மத்து பகையோ, இல்லையோ. ஆனால் இது அடுத்த ஜென்மத்திலும் தொடர்கிற நெருப்பாகதான் தெரிகிறது.
அடுத்தடுத்த தெருவில் வீடு. எதிரெதிரேதான் அலுவலகம் என்று நு£றடிக்குள்தான் இருக்கிறது இருவரது புழக்கமும்! இதுதான் இந்த ஜென்ம பகையில் தீயை மூட்டி, உஷ்ண பெட்ரோலை ஊற்றியிருக்கிறது. விஜயகாந்தின் உறவினர் மறைவுக்கு வந்திருந்த சிலர் வடிவேலு அலுவலகத்தின் முன் காரை நிறுத்த, பிரச்சனை ஆரம்பம் ஆனது. அது கைகலப்பு, போலீஸ் ஸ்டேஷன் என்று முடிந்தது. பின்பு வடிவேலுவின் வீட்டில் கல்லெறிந்தார்கள் சிலர். அங்கிருந்துதான் இந்த சாதாரண சண்டை, ஜென்ம பகையளவுக்கு போனது என்கிறார்கள் இந்த விஷயத்தை ஆரம்பத்திலிருந்தே உற்று நோக்கி வருபவர்கள்.
தனது கலை வாழ்வு, குடும்ப வாழ்வை ஒரு போதும் சிதைத்துவிடக் கூடாது என்ற கவலை அவருக்கு நிறையவே உண்டு. இந்த ஒரு காரணத்திற்காகவே தனது குடும்பத்தை மீடியாவுக்கு முன்பு கொண்டு வரக்கூடாது என்று எப்போதும் கவனமாக இருப்பார் வடிவேலு. அப்படி ஒதுங்கி வாழ்கிற குடும்பத்தினர் மீதுதான் இந்த கல்வீச்சு நடந்தது. அதில் வடிவேலுவின் மகள்கள் கலைவாணிக்கும் கார்த்திகாவுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
சம்பவம் நடந்த போது ஜன்னலோரத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார்களாம் இருவரும். ஒருவர் ப்ளஸ் டூ வும், மற்றொருவர் பத்தாம் வகுப்பும் படித்துக் கொண்டிருந்தார்கள். வேகமாக பறந்து வந்த கற்கள், இவர்கள் சுதாரிப்பதற்குள் மண்டையை தாக்கியதாம். ரத்தம் வழிய ஐயோ அம்மா என்று அவர்கள் அலறிய சப்தம் கேட்டு பதறிக் கொண்டு ஓடிவந்த வடிவேலு, குழந்தைகள் கண்ணெதிரே ரத்தம் வழிய நிற்பதை கண்டு மயக்கம் வராத குறையாக அதிர்ந்து போனாராம். இரண்டு குழந்தைகளையும் வாரி அணைத்துக் கொண்டவர், மேற்கு மாம்பலத்திலிருந்து தனது குடும்ப டாக்டர் வருகிற வரைக்கும் ரத்தம் வெளியே செல்லாதபடி அழுத்திக் கொண்டிருந்தாராம்.
அதன்பின் அடிப்பட்ட இடத்தில் தையல் போடப்பட்டது. காயம் ஆற வேண்டும் என்பதற்காக தலைமுடியில் ஒரு பகுதியை நீக்கும்படி ஆனது. இரண்டு மாதம் குழந்தைகளை பள்ளிக்கும் அனுப்பவில்லையாம் வடிவேலு.
இந்த ரணம் அவர் மனதில் அப்படியே வடுவாக பதிந்திருக்கிறது. ஒருவேளை விஜயகாந்த் திமுக வோடு கூட்டணி வைத்திருந்தால் கூட, வடிவேலு அதிமுக மேடையில் ஏறியிருப்பார் என்கிறார்கள் இந்த விஷயத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்ட வடிவேலு தரப்பினர்.
திருவாரூர் மேடையில் அழகிரியண்ணனுக்கு நன்றி என்று சொன்னார் வடிவேலு. இந்த மேடையை அவருக்கு அமைத்துக் கொடுத்ததே அவர்தான் என்பது உலகறிந்த செய்தி. என்றாலும், மு.க.அழகிரி மீது வடிவேலுவுக்கு நம்பிக்கையும் அன்பும் வந்தது எப்போதிலிருந்து?
அதற்கும் ஒரு வலுவான சம்பவம் இருக்கிறது என்று விவரிக்க ஆரம்பித்தார்கள் அதே நபர்கள். 'உலகம்' என்ற படத்தில் இருபத்தைந்து வேடத்தில் நடிக்கப் போகிறார் வடிவேலு. மிக பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தை இயக்கப் போகிறார் ஆதம் பாவா என்பவர். இவரும் வடிவேலுவும் நெருங்கிய நண்பர்கள். இருவருக்குமே சொந்த ஊர் மதுரை என்பதுதான் இன்னும் விசேஷம்.
இந்த ஆதம்பாவாவின் உறவினர்கள் பலருக்கு கறிக்கடை பிசினஸ். இவர்கள் வியாபாரம் செய்யும் அதே தெருவில் இருக்கிற வேறொருவர் கறியை குறைந்த விலையில் விற்றிருக்கிறார். மற்றவர்களை விட இந்த நபர் ஆதம் பாவாவுக்கு இன்னும் நெருக்கமாம். வாடிக்கையாளர்கள் கூட்டம் இந்த நபரின் கடையில் குவிய குவிய நிலைமை அடிதடியாகிவிட்டது. மற்ற வியாபாரிகள் அத்தனை பேரும் மு.க.அழகிரியிடம் வந்து முறையிட, சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய உத்தரவிட்டாராம் அழகிரி.
சென்னையிலிருந்த ஆதம் பாவாவிற்கு விஷயத்தை சொல்லி, எப்படியாவது வெளியே கொண்டு வந்துவிடும்படி கறிக்கடைக்காரர் குடும்பத்தினர் கெஞ்ச, நண்பரான வடிவேலுவின் உதவியை நாடினார் ஆதம்பாவா.
அழகிரியண்ணன பார்த்தா எல்லாம் சரியாகிடும். நானே நேரா போறேன் என்று மதுரைக்கு வண்டியை கிளப்பினார் வடிவேலு. போகிற வழியிலேயே தொலைபேசியில், அண்ணே... உங்களை பார்க்கத்தான் மதுரைக்கு வந்துகிட்டிருக்கேன் என்று விலாவாரியாக விஷயத்தை சொன்னாராம். அதுக்காக நீங்க மெனக்கட்டு வரணுமா, நான் பார்த்துக்கிறேன் என்று அவர் சொன்ன பிறகும், நேரில் போய் இறங்கினார் வடிவேலு.
இவர் போய் சேர்ந்தபோது எல்லாம் தலைகீழாக மாறியிருந்தது. சம்பந்தப்பட்ட உறவினர்கள் அத்தனை பேரும் அழகிரிக்கு நன்றி சொல்ல வந்தார்களாம். அவர்கள் முன்னிலையில், நான் என்னத்தை செஞ்சுட்டேன். எல்லாம் வடிவேலுதான் என்று வடிவேலுவை பெருமை படுத்தினாராம் அழகிரி. அன்றிலிருந்து அண்ணே... அண்ணே... என்று அன்பை பொழிய ஆரம்பித்தார் வடிவேலு.
இந்த நன்றியுணர்ச்சியும், விஜயகாந்த் மீதான பகைமையுணர்ச்சியும், மகள்கள் மீதான பாசவுணர்ச்சியும்தான் வடிவேலுவை இப்படியெல்லாம் பேச வைக்குது என்கிறார்கள் அவர்கள்.
கை புள்ளையோ, கட்டப் புள்ளையோ, சவுண்டு என்னவோ பலமாத்தான் இருக்கு!
No comments:
Post a Comment