சமுத்திரகனி இயக்கத்தில் இயக்குநர் சசிகுமார் நடிக்கும் ‘போராளி’ படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்குகிறது.
சசிகுமாரும் சமுத்திரகனியும் கேரளாவுக்குப் போய் 20 நாட்கள் தங்கி கதை விவாதத்தை நடத்தித் திரும்பி இருக்கிறார்கள். ‘போராளி’ கதையில் ஈழ விவகாரங்கள் அதிகமாக இடம்பெற்று இருப்பதாகத் தெரிகிறது. வெளியளவில் தெரியாவிட்டாலும், ஈழ விவகாரத்தில் சசிகுமார் தீவிர ஆர்வம் காட்டி வருபவர்.
‘பசங்க’ படத்தின் வருமானத்தில் ஈழ மக்களுக்கு இலவச துணிமணிகளை அனுப்பி வைத்தவர். அதோடு, ‘தமிழ்ப் படங்களின் எப்.எம்.எஸ். உரிமையை இலங்கைக்கு வழங்கக்கூடாது!’ எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர். ‘போராளி’ படத்தில் ஈழ விவகாரத்தை நேரடியாகப் பேசாமல், அதையொட்டிய நிகழ்வுகளைச் சூசகமாகக் காட்டப்போகிறார்களாம்.
‘ஊரே செத்தப்பவும், உட்கார்ந்து சாப்பிட்ட பயலுகதானடா நாம...’ என்பதுபோன்ற ஈழ உணர்வுமிகு வசனங்கள் படத்தில் நிறைய இருக்கின்றனவாம். ‘போராளி’ என்ற தலைப்பை பதிவு செய்யும்போதே, ‘இது ஈழம் சம்பந்தப்பட்ட கதையா?’ எனக் கேட்டிருக்கிறார்கள். ‘தனி மனிதனின் வாழ்வியல் போராட்டம்!’ எனச் சொல்லி இருக்கிறார் சமுத்திரகனி.
படத்தில் சசிக்கு ஜோடியாக திரிஷா, அஞ்சலி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

No comments:
Post a Comment