நடிகை வனிதாவிடம் வார இறுதி நாட்களில் வசிப்பதற்கு மகனை ஒப்படைக்க வேண்டும் என்று முன்னாள் கணவனுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ஆகாஷ், நடிகை வனிதாவுக்கு விஜய்ஸ்ரீஹரி (வயது 9) என்ற மகன் இருக்கிறான். இந்த நிலையில் ஆகாஷும், வனிதாவும் விவாகரத்து செய்து கொண்டனர். குடும்பநல கோர்ட்டு உத்தரவுப்படி மகனை வளர்ப்பதற்கான உரிமை வனிதாவிடம் உள்ளது. மகனை ஆகாஷ் வந்து பார்த்து செல்ல அனுமதி தரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வனிதாவுக்கும், அவரது தந்தை நடிகர் விஜயகுமாருக்கும் இடையே எழுந்த குடும்பச் சண்டையின் காரணமாக ஆகாசிடம் விஜய்ஸ்ரீஹரி சில மாதங்களுக்கு முன்பு விடப்பட்டான். அதன் பிறகு அவன் வனிதாவிடம் வரவில்லை.
இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வனிதா வழக்கு தொடர்ந்தார். வனிதாவிடம் விஜய்ஸ்ரீஹரியை விடவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்ட பிறகும், தாயாருடன் செல்ல விஜய்ஸ்ரீஹரி மீண்டும், மீண்டும் மறுத்து வந்தான்.
மகன், தன்னுடன் வசிப்பதற்கு அனுமதி கேட்டு ஐகோர்ட்டில் ஆகாஷ் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரித்தார். அவர் முன்னிலையிலும் வனிதாவுடன் செல்ல விஜய்ஸ்ரீஹரி மறுத்துவிட்டான்.
அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் கடந்த பிப்ரவரி மாதம் 2-ந் தேதி இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், `வனிதா மற்றும் அவரது 2-வது கணவரும் மாற்றுத் தந்தையுமான ஆனந்தராஜனுடன் வசித்தபோது விஜய்ஸ்ரீஹரிக்கு சில துன்பமான நிகழ்வுகள் நடந்து வனிதா மீது இந்த அளவுக்கு வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அல்லது வனிதாவிடம் சென்றுவிடக்கூடாது என்பதற்காக ஆகாஷ் அவனது மனதை இந்த அளவுக்கு கலைத்து தன்வசப்படுத்தி இருக்க முடியும்.
எனவே விஜய்ஸ்ரீஹரியை சென்னை எழும்பூரிலுள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரி டாக்டர் வி.ஜெயந்தினியிடம் கொண்டு செல்ல வேண்டும். அந்த குழந்தையின் ஆழ்மனதில் உள்ளதை டாக்டர் கண்டறிந்து அதுதொடர்பான அறிக்கையை 14-ந் தேதிக்குள் கோர்ட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
பெற்றோர் சேர்ந்து வாழும் குடும்பங்களில், கண்டிப்புடன் நடந்து கொள்ளும் தாயைவிட, அதிக அளவில் விட்டுக்கொடுக்கும் தந்தையை குழந்தைகள் அதிக அளவில் ஒட்டி வாழ்கின்றனர். பெற்றோர் பிரிந்து வாழும் நிலையில் கண்டிப்பான தாயை விட்டு விட்டு, தந்தையை மட்டும் நேசிக்கும் நிலை குழந்தைக்கு ஏற்பட்டுவிடும். ஆனால் ஒரு குழந்தைக்கு கண்டிப்பும், அன்பும் கலந்து தரப்பட வேண்டியது அவசியம்.
ஒவ்வொரு வாரத்திலும் வெள்ளிக்கிழமை பள்ளி நேரம் முடிந்ததும் விஜய்ஸ்ரீஹரியை ஆகாஷ் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது முன்னாள் மனைவி, வனிதாவின் வீட்டுக்கு அழைத்து செல்ல வேண்டும். அவனை வனிதாவின் பராமரிப்பில் விட்டுவிட வேண்டும்.
பின்னர் திங்கட்கிழமை காலையில் விஜய்ஸ்ரீஹரியை வனிதா பள்ளிக்கு அழைத்துச் சென்று அங்கு விட்டுவிட வேண்டும். பின்னர் பள்ளி நேரம் முடிந்ததும் அவனை ஆகாஷ் தனது வீட்டுக்கு அழைத்து செல்லலாம்.
அதாவது ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை காலையில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை வரை ஆகாஷும், வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து திங்கட்கிழமை காலை வரை வனிதாவும் விஜய்ஸ்ரீஹரியை பராமரிக்க வேண்டும்.
வனிதாவின் வீட்டுக்கு செல்வதற்கு விஜய்ஸ்ரீஹரி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தால், அவனை பாப்பாகுமாரி என்ற குழந்தைகள் உளவியல் மருத்துவரிடம் ஆகாஷ் அழைத்துச் செல்ல வேண்டும். அவர் இந்த பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காண்பதற்கு உறுதி அளித்துள்ளார்.
இந்த உத்தரவுக்கு விஜய்ஸ்ரீஹரி ஒத்துழைப்பு கொடுப்பதற்கு ஆகாஷ்தான் பொறுப்பேற்க வேண்டும். இந்த உத்தரவுக்கு அவன் இணங்கவில்லை என்றால், அவனை அடுத்த கல்வி ஆண்டில் இருந்து உண்டு உறைவிடப் பள்ளிக்கு அனுப்புவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை’’ என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment