விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு மாலையில் திருக்கோவிலூர் வந்தார். 5 முனை ரோடு காந்திசிலை அருகே திருக்கோவிலூர் தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் எல்.வெங்கடேசனுக்கு ஆதரவு திரட்டி பேசினார். அவர் பேசியதாவது:-
விஜயகாந்த் விருத்தாசலத்தில் இருந்து ரிஷிவந்தியத்துக்கு வந்திருக்கிறார் என்று கூறுகின்றனர். அதுவும் சிவன் தலம்தான். இதுவும் சிவன் தலம் தான். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் கெடுதல் செய்யும் சக்தியை அழிக்கும் சக்தி சிவனுக்கு தான் உள்ளது. ஏன் இதனை நான் சொல்கின்றேன் என்றால், கலைஞர் ஒவ்வொரு தேர்தலிலும் ஏதேனும் புதிது, புதிதாக சொல்வார். ஆனால் செய்யமாட்டார். 5 முறை முதல்-அமைச்சராக இருந்த கலைஞர் நாட்டு மக்களுக்கு என்ன செய்தார்? விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூர் வருவதற்கு சரியான சாலை வசதி கூட செய்யவில்லை. என்ன செய்தார்கள் என்பதை இந்த மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றனர்.
மக்கள் குணத்தை காட்டுகின்ற நேரம் தேர்தல் நேரம். மக்களுக்கு செய்கிறேன் என்று சொல்லிவிட்டு செய்யாமல் இருந்தால் அதற்கு பாடம் புகட்டும் நேரம் இதுதான். இந்த தேர்தல் நேரத்தில் சொன்னதை செய்யாதவர்களுக்கு பாடத்தை ஓட்டு முலம் காட்டுவார்கள். விஜயகாந்த் மக்களுடனும், தெய்வத்துடனும் கூட்டணி என்று சொல்லி விட்டு அ.தி.மு.க. வுடன் எப்படி கூட்டணி வைத்தார் என்று கேட்கின்றனர்.
நான் சொன்னபடி தெய்வத்துடனும், மக்களுடனும் கூட்டணி இருக்கத் தான் செய்கிறது. நான் ஆட்சியிலோ, அதிகாரத்திலோ பங்கு கேட்கவில்லை. என்னுடைய மக்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் இந்தமுடிவை எடுத்தேன். இதே அரசுக்கு ராமதாஸ் பூஜ்ஜியம் மார்க் போட்டார். இப்போது கலைஞர் ஹீரோ என்று சொல்கிறார். அத்துடன் தி.மு.க. கூட்டணி கொள்கை கூட்டணி என்கிறார். இது கொள்ளையடிக்கின்ற கூட்டணி. இந்த தொகுதியில் போட்டியிடும் தம்பி வெங்கடேசனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யவேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த ஆட்சியை அகற்றியே ஆகவேண்டும். மக்கள் மன்றத்தின் முன்பு கேட்கிறேன். மக்களாகிய நீங்கள் நல்ல ஆட்சி அமைய பாடுபட வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஊருரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் ஆகி விடும். எனவே நமது கூட்டணிக்குள் இருக்கும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து பேசி கருத்து வேறுபாடின்றி கட்சி பணியாற்ற வேண்டும். அப்போதுதான் வெற்றி மிக எளிதாகும். தயவு செய்து மக்களே ஏமாந்து விடாதீர்கள். தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க- தே.மு.தி.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய பாடுபட வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
No comments:
Post a Comment