ம.தி.மு.க., எங்கள் அணியில் இருந்து விலகிக் கொண்டது வருத்தம் அளிக்கிறது. ம.தி.மு.க.,வில் உள்ள தமிழ் ஆர்வலர்களும், இளைஞர்களும் எங்களோடு ஒத்துழைக்க வேண்டும், என, தா.பாண்டியன் வேண்டுகோள் விடுத்தார்.
திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது, அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் களம் இறங்குகிறோம். எங்கள் அணிக்கும் பலம் உண்டு.
தேர்தலின் முக்கியத்துவம் கருதி கட்சியின் தேசிய தலைவர்கள் பரதன், சுதாகர் ரெட்டி, டி.ராஜா, அத்துல்குமார் அஞ்சான் ஆகியோர் ஏப்ரல் முதல் வாரம் தமிழகத்தில் பிரசாரம் செய்கின்றனர். இதுதவிர, தமிழக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களான நல்லக்கண்ணு, கோபு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் 234 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளனர்.
ம.தி.மு.க., எங்கள் அணியில் இருந்து விலகிக் கொண்டது வருத்தம் அளிக்கிறது. சுமுகமான முடிவுக்கு சி.பி.ஐ., எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஆனாலும், ம.தி.மு.க.,வில் உள்ள தமிழ் ஆர்வலர்களும், இளைஞர்களும் எங்களோடு ஒத்துழைக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
எங்களுடைய தேர்தல் அறிக்கையில், தண்ணீர் பிரச்னைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். அதுவே நமக்கு கவலை தரும் பிரச்னையாக உள்ளது; அண்டை மாநிலங்களில் உறவை கெடுப்பதாகவும் உள்ளது. ஆகையால், தண்ணீர் பிரச்னைக்கு முதலில் தீர்வு காணப்பட வேண்டும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம். அதற்காக ஒருங்கிணைந்த திட்டம் ஒன்றையும் உருவாக்கவேண்டும்.
தமிழகத்தில் உள்ளூர்காரர்கள் யாரும் தொழில் துவங்க முடியவில்லை. துவக்கப்பட்ட, 198 நிறுவனங்களும் அயல்நாட்டினரால் துவக்கப்பட்டுள்ளன. இதற்காக, 37 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழக மக்களுக்கு இரவு, பகல் எந்தநேரத்தில் மின்சாரம் கட்டாகும் என்று தெரியாத அவலநிலை உள்ளது. இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.
No comments:
Post a Comment