நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி ஏற்பட்டது. இதில், ம.தி.மு.க.வை தவிர, மற்ற அனைத்து கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு எண்ணிக்கையில் உடன்பாடு ஏற்பட்டது.
ம.தி.மு.க.வுக்கு 8, 9 என்ற அளவில் மட்டுமே தொகுதிகள் தரமுடியும் என்று கோரப்பட்டதால், ம.தி.மு.க.வுடன் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை. அடுத்தகட்டமாக மற்ற கட்சிகளுடன் எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக, மீதியுள்ள 160 தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல், கடந்த 16ந் தேதி இரவு திடீர் என்று வெளியிடப்பட்டது. இதில், கூட்டணி கட்சிகள் கேட்டிருந்த தொகுதிகளுக்கும், அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதால், கூட்டணி கட்சிகளுக்கிடையே அதிருப்தி ஏற்பட்டது.
இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களை நேற்று போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்துக்கு ஜெயலலிதா அழைத்திருந்தார். ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கீடு என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், எந்த தொகுதிகள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது? என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது.
நேற்று ஒவ்வொரு தலைவரையும் அழைத்து ஜெயலலிதா பேசினார். ஒவ்வொருவருக்கும் எந்தெந்த தொகுதிகள்? ஒதுக்கப்படுகின்றன என்று முடிவு செய்யப்பட்டன. இதற்கான ஒப்பந்தத்தில் ஜெயலலிதாவுடன், ஒவ்வொரு தலைவரும் கையெழுத்திட்டனர்.
இந்த நிலையில், ம.தி.மு.க. மட்டும் நேற்று போயஸ் தோட்டத்துக்கு வரவில்லை. இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடம், போயஸ் தோட்டத்துக்கு வந்து எத்தனை தொகுதிகள்? எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன? என்று முடிவு செய்வதற்கு உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா?, நீங்கள் எப்போது போகிறீர்கள்? என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு வைகோ, இதுபற்றி இன்று மாலையில் நடைபெறும் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு முன்பு எந்த கருத்தையும் நான் தெரிவிக்க இயலாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
No comments:
Post a Comment