தமிழக சட்டமன்ற தொகுதிகளில் தனித்து போட்டியிடும் எங்களை வைகோ ஆதரித்தால் பெருமையாக இருக்கும் என்று நடிகர் கார்த்திக் கூறினார்.
அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் நடிகர் கார்த்திக் சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர்,
’’நாங்கள் அறிவித்த 30 வேட்பாளர்களில் 3 பேர் அ.தி.மு.க.வில் சேர்ந்து விட்டனர். 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போதும் இது போல் தான் அவர்கள் செய்தார்கள். இப்போதும் அப்படி தான் செய்கிறார்கள்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது நான் மதிப்பும், மரியாதையும் வைத்து இருக்கிறேன். ஆனால் அவர்களுடன் இருக்கும் சகாக்களுக்கு இது போன்று தான் சிந்திக்க தோன்றும்.
எனக்கு வைகோவை ரொம்ப பிடிக்கும். அவரை என் மூத்த சகோதரனாக நினைக்கிறேன். அதனால் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்த தம்பி வெளியே வந்தது போல் அவரும் வந்திருக்கிறார். வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும்.
தேர்தல் அறிக்கைகள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நாங்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை சிலர் காப்பி அடிக்கிறார்கள். எப்படியோ மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதான். நாங்கள் 27 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். தேர்தல் ஆணையத்திடம் ஸ்டார்ச் லைட் சின்னம் கேட்டு இருக்கிறோம்.
சிவகாசி தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். நான் அங்கு போட்டியிட்டால் குறைந்தபட்சம் 70 ஆயிரம் ஓட்டுக்களையாவது பெறுவேன். ஆனால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்றபோது அந்த கட்சியை ஆதரித்து சிவகாசியில் பேசி விட்டேன். இப்போது நான் அவர்களுடன் இல்லை. இப்போது அவர்களை எதிர்த்து அங்கே எப்படி பேச முடியும்.
சிவகாசி மட்டுமல்லாமல் நாங்கள் போட்டியிடாத இடங்களில் இருந்து சுயேச்சை வேட்பாளர்கள் எங்கள் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள். அவர்களில் எங்கள் கட்சிக்கு ஏற்றவர்களை தேர்வு செய்து, அவர்களை ஆதரிக்க முடிவு செய்து இருக்கிறோம்.
29-ந் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறேன். குறைந்த நாட்களில் எல்லா தொகுதிக்கும் என்னால் செல்ல முடியாது. அதனால் பிரச்சார சி.டி.யை தயார் செய்து வைத்து இருக்கிறேன். அந்த சி.டி.க்களை நிர்வாகிகளிடம் கொடுத்து அனுப்புவேன்’’ என்று கூறினார்.
No comments:
Post a Comment