கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஹசீனா சையத், நேற்று முன்தினம் மாற்றப்பட்டார். புதிய வேட்பாளர் மக்பூல்ஜான், நேற்று வேட்பு மனு தாக்கல் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று மாலை 3 மணி வரை, அவர், மனு தாக்கல் செய்ய வரவில்லை. அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற பரபரப்பும், பீதியும் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக, சென்னையைச் சேர்ந்த ஹசீனா சையத் அறிவிக்கப்பட்டார். ஹசீனா சையத், தங்கபாலு நடத்தும் மெகா, "டிவி'யில் பணிபுரிவதோடு, சென்னையில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். உள்ளூர்வாசிகளுக்கு சீட் ஒதுக்கப்படாததால், ஆத்திரமடைந்த காங்., கட்சியினர், இது குறித்து கட்சித் தலைமைக்கு புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து நடந்த விசாரணையில், தங்கபாலு பணம் வாங்கி கொண்டு சீட் கொடுத்த விவரம் கட்சித் தலைமைக்கு தெரிந்தது. மேலும், நேற்று முன்தினம், ஹசீனா சையத் மனு தாக்கல் செய்ய சென்ற போது, உள்ளூர் நிர்வாகிகள் ஒட்டு மொத்தமாக புறக்கணித்தனர். ஹசீனா சையத், தங்கபாலுவின் ஆலோசனையின் பேரில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று மனு தாக்கல் செய்தார். அதே நேரம், கிருஷ்ணகிரி தொகுதிக்கு மேட்டூரைச் சேர்ந்த மக்பூல்ஜான் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கும் உள்ளூர் நிர்வாகிகள் மத்தியில் மீண்டும் அதிருப்தி கிளம்பிய நிலையில், ஏற்கனவே மனு தாக்கல் செய்த ஹசீனா சையத், "நாளை (நேற்று) மாலை 3 மணி வரையில் தான் மனு தாக்கல் செய்ய நேரம் உள்ளது. அது வரையில் பாருங்கள்' என, சஸ்பென்சுடன், கட்சியினர் மத்தியில் வெளிப்படையாக பேசினார்.
நேற்று காலை, புதிய வேட்பாளர் மக்பூல்ஜான், மனு தாக்கல் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், மக்பூல் ஜான், மதியம் 1.30 மணி வரை வரவில்லை. காங்கிரசார், மக்பூல் ஜான் மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட போது, மனு தாக்கலுக்கு வந்து கொண்டிருப்பதாகவும், ஒரு மணி நேரத்தில் அங்கு வருவதாகவும் கூறினார். ஆனால், 2.50 மணி வரை அவர் வரவில்லை. மனு தாக்கல் முடிந்த 3 மணி வரை, புதிய வேட்பாளர் மக்பூல் ஜான், மனு தாக்கல் செய்ய வரவில்லை. அவரது மொபைல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தங்கபாலு கோஷ்டியினர், ஹசீனாசையத்தை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதற்காக, மக்பூல்ஜானை கடத்திச் சென்றிருக்கலாம் அல்லது அவரை தங்கபாலு கோஷ்டியினர் மனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்து இருக்கலாம் என, காங்., கட்சியினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.
ஆவணங்கள் தயாரிக்க முடியவில்லை: மக்பூல் ஜான்: காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள, கிருஷ்ணகிரி தொகுதி அதிகாரபூர்வ வேட்பாளர் மக்பூல் ஜானிடம் தொலைபேசியில் கேட்ட போது, "காங்கிரஸ் மேலிடம் என்னை வேட்பாளராக அறிவித்த தகவல், 25ம் தேதி இரவு தான் எனக்கு தெரிந்தது. மனு தாக்கலுக்கு நேற்று கடைசி நாள் என்பதால், மனு தாக்கலுக்கு தேவையான, "அபிடவிட்' உள்ளிட்ட ஆவணங்களை தயார் செய்ய முடியவில்லை. அதனால், கிருஷ்ணகிரியில் மனு தாக்கல் செய்யவில்லை' என்றார். இப்போது எங்கே இருக்கிறார் என்ற கேள்விக்கு பதில் தெரிவிக்கவில்லை. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது வீட்டில், அவரது மனைவியிடம் விசாரித்த போது, "என் கணவர் கிருஷ்ணகிரியில் இருந்து வந்து கொண்டிருக்கிறார். வேறு எதுவும் எங்களுக்கு தெரியாது' என்றார்.
8 பேர் மனு தாக்கல்: அதிகாரபூர்வ வேட்பாளர் யார்? புதிதாக அறிவிக்கப்பட்ட மக்பூல் ஜான், கடைசி நேரம் வரை வரவில்லை. அதே நேரத்தில், அதிருப்தி காங்கிரஸ் உள்ளூர் நிர்வாகிகள், மதியம் 2.20 மணியில் இருந்து அடுத்தடுத்து மனு தாக்கல் செய்தனர்.
காங்., மாநிலச் செயலர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மாவட்டச் செயலர் ஆறுமுகம் சுப்பிரமணி, முன்னாள் நகராட்சித் தலைவர் சத்யமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ரங்கநாதன், மாவட்ட பொதுச் செயலர் டாக்டர் தகி, மாவட்ட துணைத் தலைவர் அசோகன், முன்னாள் சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் அமானுல்லா, காவேரிப்பட்டணம் வட்டார தலைவர் சுப்பிரமணி ஆகிய எட்டு பேர், அடுத்தடுத்து சுயேச்சையாக மனு தாக்கல் செய்தனர். மக்பூல் ஜான் மனு தாக்கல் செய்ய வரவில்லை என்பதால், மீண்டும் கிருஷ்ணகிரி தொகுதியில் வேட்பாளர் மாற்றம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும், உள்ளூர் நிர்வாகிகள் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரத்தில் நம்புகின்றனர். கட்சியின் அங்கீகார கடிதத்துடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஹசீனா சையத், மனுவுடன் கட்சி சின்னம் ஒதுக்கீடுக்கான, "பி' பார்ம் இணைத்து மனு தாக்கல் செய்துள்ளார். சுயேச்சையாக மனு தாக்கல் செய்தவர்களில் யாராவது ஒருவரை காங்கிரஸ் தலைமை அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவித்தால், ஏற்கனவே கட்சி அங்கீகாரத்துடன் மனு தாக்கல் செய்த ஹசீனா சையத் மனு வாபஸ் பெற வேண்டும். அப்போது தான், சுயேச்சையாக தாக்கல் செய்தவர்களுக்கு கட்சி சின்ன ஒதுக்கீட்டுக்கான, "பி' பார்ம் இணைப்பை வழங்கி கட்சி சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும். காங்., தலைமை புதிய வேட்பாளரை மீண்டும் அறிவிக்குமா? அல்லது ஹசீனா சையத் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு கிருஷ்ணகிரி மாவட்ட காங்., கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment