விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்ட திருவாரூர் மாவட்டத்தில், செல்வாக்குடன் இருந்த கம்யூனிஸ்ட்கள், காலப்போக்கில் தேய்ந்து விட்டனர். கடந்த சட்டசபை தேர்தல் வரை திருத்துறைப்பூண்டி (தனி), மன்னார்குடி, நன்னிலம், திருவாரூர், வலங்கைமான் என ஐந்து தொகுதிகள் இருந்தன. மறுசீரமைப்பில் வலங்கைமான் நீக்கப்பட்டு, அதில் இருந்த, 30 கிராமங்கள் நன்னிலம் தொகுதியிலும், மற்ற கிராமங்கள், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளதால் தற்போது, நான்கு தொகுதிகள் மட்டுமே உள்ளன.
திருவாரூர்: இந்த தொகுதி 35 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுத் தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு, தி.மு.க., செல்வாக்கு மிக்கதாக உள்ளது. அதனால், தி.மு.க., கூட்டணியில் மார்க்சிஸ்ட், 1980, 84, 89, 91 என, நான்கு முறை வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க.,வும் 1977, 96, 2001, 06ல் வெற்றி பெற்றது. 1980ல் மட்டும், தோல்வியடைந்துள்ளது. தி.மு.க., - அ.தி.மு.க., நேரிடையான மோதல் 2006 மற்றும் தற்போது நடக்கிறது.
இதுவரை வெற்றி பெற்று சட்டசபைக்குச் சென்றவர்களால், திருவாரூர் மாவட்ட வளர்ச்சிக்கு பெரிய பங்களிப்பு எதுவும் இல்லை. பாதாள சாக்கடைத் திட்டத்தால் சாலை வசதிகள் இல்லாமல், இரண்டரை ஆண்டுகளாக பொதுமக்கள் கடும் வேதனை அடைந்ததுள்ளனர். பஸ் நிலையத்திற்கு அனுமதி வழங்கி பல ஆண்டுகள் ஆகியும் முதல்வர் கருணாநிதி பெயரைக் கூறி, புதிய இடத்திற்கு மாற்றுவதை முக்கிய புள்ளிகள் தடுத்து வருவதால், அதுவும் கிடப்பில் உள்ளது.
கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக இருந்தும், தரமிக்க பள்ளிகள் உருவாக்கப்படவில்லை. முதல்வர் கருணாநிதி, நீண்ட காலத்திற்குப் பின், தன் சொந்த மாவட்டமான திருவாரூரில், தன் சுய முயற்சியால் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மத்திய பல்கலைக் கழகம் ஆகியவற்றைக் கொண்டு வந்தார். இவற்றைத் தவிர பெரிய சாதனை ஒன்றும் இல்லை.
திருத்துறைப்பூண்டி: இந்த தொகுதியை கம்யூனிஸ்ட்களின் கோட்டை எனக் கூறலாம். 1977 முதல், இத்தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் தொடர்ந்து தன்வசப்படுத்தி வருகிறது. 1980ல் மட்டும் மார்க்சிஸ்ட் வெற்றி பெற்றுள்ளது. இம்முறை அ.தி.மு.க., கூட்டணியில், பெரும் போராட்டத்துக்குப் பிறகு, இந்திய கம்யூனிஸ்ட் தொகுதியைப் பெற்றுள்ளது. இந்தத் தொகுதிக்கு, கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட அரசு கலைக் கல்லூரி தவிர வேறு ஒன்றும் வரவில்லை.
மன்னார்குடி: இந்த தொகுதி கம்யூனிஸ்ட் மற்றும் அ.தி.மு.க.,வினருக்கு சாதகமாக இருந்தாலும், 1989ல் தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. 1977, 80, 96, 2001, 06 என, ஐந்து முறை இந்திய கம்யூனிஸ்ட்டும், 1984, 91 என இரு முறை அ.தி.மு.க.,வும் வெற்றி பெற்றுள்ளன. சிவபுண்ணியம் தான் அதிக முறை எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார். இவர் தி.மு.க., தலைமைக்கு நல்லவராக இருந்தாரே தவிர, தொகுதி மக்களுக்கு பெரிய அளவில் சாதிக்கவில்லை.
நன்னிலம்: இந்த தொகுதியில் தி.மு.க., - அ.தி.மு.க., மற்றும் காங்., என, சமநிலையில் இருப்பதால், கூட்டணியில் எல்லா கட்சிகளும் மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன. தற்போது, அ.தி.மு.க., விற்கு சாதகமான வலங்கைமான் தொகுதியைச் சேர்ந்த கிராமங்கள், நன்னிலத்தில் இணைக்கப்பட்டுள்ளதால், அக்கட்சி வலுப்பெற்றுள்ளது.
இங்கு, 1977, 84, 89ல் தி.மு.க.,வும், 1980, 91ல் அ.தி.மு.க.,வும், 1996, 2001ல் த.மா.கா.,வும், 06ல் இந்திய கம்யூனிஸ்ட்டும் வெற்றி பெற்றுள்ளன. அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இருந்திருந்தாலும் தொகுதியில் வளர்ச்சி இல்லை.
தமிழக மொத்த உணவு தேவையில், டெல்டா மாவட்டம், 50 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டத்தில், விவசாயம் சார்ந்த தொழிலோ அல்லது விவசாய வளர்ச்சிக்கு அரசின் முன்னோடி திட்டங்களோ இல்லை என்பதே, ஒட்டுமொத்த விவசாயிகளின் கருத்து. ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவது, வாடிக்கையாக உள்ளது. வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த, அரசு, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கண்ணன் ஆற்றை நேரிடையாக கடலில் கலக்கும் திட்டம் மற்றும் முதலை முத்து வாரி தண்ணீரை வெண்ணாறு கீழ்குமுளி மூலம் கொள்ளிடம் ஆற்றில் கலக்கும் மெகா திட்டம் ஆகிய இரண்டையும், டெல்டா விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கையாக வைத்து வருகின்றனர்.
இந்த இரு திட்டங்களை செயல்படுத்தினால் மட்டுமே, டெல்டா மாவட்டங்களில் வெள்ளத்தால் ஏற்படும் சேதத்தை தடுக்க முடியும். மாவட்டம் உருவாகி, 14 ஆண்டுகள் கடந்தும், பெரிய வளர்ச்சி இல்லை. விமான தளம், அரசுக் கல்லூரி, பாலிடெக்னிக் ஆகிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டதோடு சரி.
திருவாரூர் தொகுதிக்கு முதல்வர் கருணாநிதி அறிவிக்கப்பட்டுள்ளதால், சொந்த ஊரில் போட்டியிடுகிறார் என்ற உணர்வில், மக்கள் அவரை வெற்றி பெற வைத்துவிடுவர். திருத்துறைப்பூண்டியை வைத்து அரசியல் நடத்திவரும் கம்யூனிஸ்ட்களும், கூட்டணி பலத்தால் கரையைக் கடந்துவிடுவர்.
மன்னார்குடி மற்றும் நன்னிலம் தொகுதியில் தி.மு.க., - அ.தி.மு.க., வினரிடையே ஏற்பட்டுள்ள போட்டி கடுமையாக இருக்கும். இருந்தாலும் சாதகமான நிலை, கூட்டணி பலம் ஆகியவையால் அ.தி.மு.க.,வை, "ஜெ' போடவைக்கிறது.
.
No comments:
Post a Comment