தி.மு.க., கூட்டணி பலத்தை 50 சதவீதம் நம்பினாலும், "திருமங்கலம்' பார்முலாவை 100 சதவீதம் நம்புகிறது. ரிஷிவந்தியம் தொகுதியை பொறுத்தவரை 1984ம் ஆண்டு முதலே இந்த பார்முலாவை காங்கிரஸ் பின்பற்றி வருகிறது. இந்த முறை தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் களமிறங்கியுள்ளதால், பழைய பார்முலா காங்., கட்சிக்கு கை கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மூப்பனாரின் தீவிர ஆதரவாளரான சிவராஜ் எம்.எல்.ஏ., 1984ம் ஆண்டு காங்., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அடுத்த 1989 தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் எகால் நடேசன் என்பவரிடம் தோல்வியை தழுவினார். 1991 தேர்தலில் காங்., கூட்டணியில் அ.தி.மு.க.,விற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதன்பின் 1996, 2001ம் ஆண்டுகளில் த.மா.கா., சார்பிலும், 2006ம் ஆண்டு காங்., சார்பிலும் சிவராஜ் தொடர்ந்து வெற்றி பெற்றார். திருமங்கலத்தில் நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க., பின்பற்றிய பார்முலாவை, 1984ம் ஆண்டிலிருந்து காங்., இந்த தொகுதியில் பின்பற்றி வருகிறது.
தொகுதி வளர்ச்சிக்காக சிவராஜ் எம்.எல்.ஏ., எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது ஒட்டுமொத்த புகார். ஆனால், ரவுடியிசம், ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாமல் ஒவ்வொரு தேர்தலின் போதும் "ப' வைட்டமினை முறையாக பிரித்து கொடுத்து, தொகுதியில் அசைக்க முடியாத ஜம்பவானாக உள்ளார்.
ஒவ்வொரு தேர்தலின் போதும் உறுதியான நம்பிக்கையுடன் வலம் வரும் காங்., கட்சியினருக்கு, இந்த முறை தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் எதிரே நிற்பது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்தை யாரும் எளிதில் சந்திக்க முடியாது. விருத்தாசலத்தில் வெற்றி பெற்று எத்தனை முறை தொகுதிக்கு சென்றார். தொகுதிக்காக சட்டசபையில் விடுத்த கோரிக்கைகள் என்னென்ன போன்ற கேள்விகளுடன் காங்., தரப்பில் களமிறங்க தயாராகி வருகின்றனர். வழக்கம் போல் தங்கள் "பார்முலாவை' பல மடங்கு அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
ரசிகர் பட்டாளங்களின் ஆர்ப்பாட்டம், ஏழைகளை கவரும் வெகுளித்தனமான விஜயகாந்தின் பேச்சுகளை மட்டும் நம்பி களமிறங்கினால், விபரீதத்தை சந்திக்க நேரும் என்ற அச்சமும் தே.மு.தி.க., உள்ளூர் நிர்வாகிகளிடம் உள்ளது. காங்., பாணியில் களமிறங்கினால் மட்டுமே கரையேற முடியும் என, உள்ளூர் தே.மு.தி.க.,வினர் கூறி வருகின்றனர்.
விஜயகாந்த் நினைப்பதை போல் ரிஷிவந்தியம் தொகுதியில் காங்., கட்சியை எளிதில் வெற்றி கொள்ள முடியாது என, உள்ளூர் தொண்டர்கள் நினைப்பதால் ரிஷிவந்தியம் தேர்தல் களம் பரபரப்பாகியுள்ளது.
No comments:
Post a Comment