41 தொகுதிகளை அடையாளம் கண்டு விட்டோம் என்று தேமுதிக கூறிய பின்னரும் கூட அதன் தொகுதிகளை கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்னும் அறிவிக்காமல் உள்ளதால் அக்கட்சியினர் பெரும் குழப்பமடைந்துள்ளனர். இன்றாவது தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியாகுமா என்று கொட்டாவி விட்டபடி அனைவரும் காத்துள்ளனர்.
மகா குழப்பத்தில் தொடர்ந்து நடை போட்டுக் கொண்டிருக்கிறது அதிமுக கூட்டணி . அதிமுகவின் போக்கால் வெறுத்துப் போன மதிமுக கூட்டணியே வேண்டாம் என்று போய் விட்டது. இன்னொரு முக்கியக் கட்சியான தேமுதிகவோ இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் உள்ளது.
இக்கட்சிக் குழுவினர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஜெயலலிதாவுடன், 2 நாட்கள் விடிய விடிய சுமார் 20 மணி நேரம் நீண்ட ஆலோசனை நடத்தினர்.
அதில் 41 தொகுதிகளையும் அடையாளம் கண்டுவிட்டதாகக் கூறிவிட்டுச் சென்றார் பண்ருட்டி. இதனால் நேற்றே விஜயகாந்த் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்று அதிகாலை வரை ஒரு சத்தத்தையும் காணோம்.
நேற்று முழுவதும் தேமுதிக தலைமை அலுவலகம் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அந்த அளவுக்கு படு இறுக்கமாக காணப்பட்டது தேமுதிக அலுவலகம்.
தாங்கள் கேட்ட சில முக்கியத் தொகுதிகளை அதிமுக தர மறுத்து விட்டதாக தேமுதிக தரப்பில் கூறப்படுகிறது.
குறி்ப்பாக 7 மாவட்டங்களில் தேமுதிகவுக்கு ஜெயலலிதா ஒரு சீட் கூட தரவில்லை, இதனால் அந்த மாவட்டச் செயலாளர்கள் விஜய்காந்திடம் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இன்று அனைத்து மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்தை அவசரமாகக் கூட்டிய விஜய்காந்த் அவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதனால் இன்றாவது வேட்பாளர் பட்டியல் வெளியாகுமா என்ற சந்தேகமும் நிலவுகிறது.
No comments:
Post a Comment