தேர்தல் தேதி நெருங்க நெருங்க எப்படி பணப்பட்டுவாடா செய்வது, பரிசுப் பொருட்களை கொடுப்பது என புதுசு புதுசா தினுசு தினுசா அரசியல்கட்சிகள் யோசித்துக் கொண்டிருக்கின்றன. விலைமதிப்பற்ற ஓட்டுக்களை விலைகொடுத்து வாங்க முயற்சிக்கும் இந்த முயற்சிகளை தடுக்க தேர்தல் ஆணையம் விழிப்புடன் செயல்பட்டு வருகிறது. பகல்- இரவு பாராமல் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனை, கண்காணிப்பு என நடந்து கொண்டே இருந்தாலும், சைலண்ட்டாக அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடாவை தொடங்கி விட்டன. 24 மணி நேர கண்காணிப்பால் வாக்காளர்களுக்கு நேரடியாக பணம் கொடுக்க கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன. "பூத் சிலிப்' கொடுப்பதுபோல் பணம் பட்டுவாடா செய்வதற்கும் தேர்தல் கமிஷன் வாய்ப்பு அளிக்கவில்லை.
இதனால் மதுரையில் வீடு வீடாக சென்று, வாக்காளர்களின் மொபைல் போன், வங்கி கணக்கு போன்ற விபரங்களை சிலர் சேகரிக்கின்றனர். இதுதொடர்பாக, தி.மு.க.,வை சேர்ந்த சிலரை மதுரை ஜெய்ஹிந்த்புரம், தெப்பக்குளம், எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கீழவைத்தியநாதபுரத்தில் இரவு 11 மணிக்கு மின்தடையை ஏற்படுத்தி, முன்னாள் பெண் கவுன்சிலர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், வீடு வீடாக சென்று "கணக்கெடுத்தாகவும்', அவரது வீட்டை சோதனையிட வேண்டும் என்றும் வலியுறுத்தி அ.தி.மு.க.,வினர் நேற்று காலை 10 மணி முதல் 11.30 மணி வரை தத்தனேரி மெயின் ரோட்டில் மறியல் செய்தனர்.
அவர்கள் கூறுகையில், ""பணம், இலவச பொருட்கள் கொடுப்பதாக போலீசிற்கு தகவல் தெரிவித்தபோது, பெயரளவிற்கு விசாரித்துவிட்டு சென்றுவிட்டனர். இதை பயன்படுத்தி மீண்டும் இரவு ஒரு மணிக்கு மின்தடை செய்து பணம் கொடுத்தனர். தேர்தல் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து, வீடுகளை சோதனையிட கூறினோம். அவர்களோ "தங்களுக்கு "பவர்' இல்லை (இங்கேயும் பவர் பிரச்னையா?); கலெக்டர்தான் முடிவு செய்ய வேண்டும்' என்றுக்கூறி சென்றுவிட்டனர். இதை பயன்படுத்தி, இலவச பொருட்களை கடத்திவிட்டனர்,'' என்றனர். இவர்களை போலீசார் சமரசம் செய்து கொண்டிருந்தபோது, தி.மு.க., நிர்வாகிகள் அங்கு வந்தனர். வீடுகளில் சோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க.,வினரை போலீசார் சமரசம் செய்து அனுப்பினர்.
இலவசங்களையும், ஓட்டுக்கு பணம் கொடுப்பதையும் தேர்தல் கமிஷன் வேண்டுமானால் எதிர்க்கலாம். ஆனால் விலைமதிப்பற்ற வாக்குகளுக்கு சொந்தக்காரர்களான வாக்காளர்கள் எப்போது நம் வீட்டுக்கு பணம் வரும், இலவச பொருட்கள் எப்போது தருவார்கள் என்றே காத்திருக்கிறார்கள். மதுரை நகரைப் பொறுத்தவரை சமீப நாட்களாக மாலை 6.30 மணியில் தொடங்கி, அதிகாலை வரை அவ்வப்போது 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை கரண்ட் கட் ஆகிறது. ஒருவேளை பணம் சப்ளைக்காகத்தான் மின் சப்ளையை நிறுத்துறாங்களோ? என்று நினைக்கும் வாக்காளர்கள், கரண்ட் கட் ஆனாலே... கதவை திறந்து வைத்து வாக்குகளை விற்க தயாராகி விடுகிறார்கள்.
No comments:
Post a Comment