ஜப்பானில் அணு உலை வெடித்ததால் பால் மற்றும் குடிநீரில் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜப்பானில் கடந்த வாரம் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து சுனாமி பேரலைகள் உருவாகி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இந்த இயற்கை பேரழிவுகளில் சிக்கி இதுவரை 18,600 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் 7320 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 11 ஆயிரத்து 330 பேரை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுனாமி தாக்கியத்தில் டோக்கியோவுக்கு வடகிழக்கில் உள்ள புகுஷிமாவில் உள்ள அணுமின் நிலையம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் உள்ள 4 அணு உலைகள் வெடித்தன. எனவே, அவற்றை குளிர்விக்கும் பணி நடந்து வருகிறது. இருந்தும் அதில் இருந்து அணு கதிர்வீச்சு வெளியேறி அப்பகுதியில் பரவி வருகிறது. புகுஷிமா அணு உலைப்பகுதியில் 30 கி.மீ. பரப்பள வில் வசிக்கும் பொது மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் அங்கு தங்கியிருப்பவர்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே டோக்கியோ நகரில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்களிலும் அணு கதிர் வீச்சின் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரில் கதிர்வீச்சு தாக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது.
இது புகுஷிமாவின் முதல் அணு உலை வெடித்ததில் இருந்து வெளியான கதிர் வீச்சு என நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். கதிர்வீச்சு பாதித்துள்ள பால், கீரை, குடி நீர் போன்றவை எங்கிருந்து வருகிறது, அவை எப்படி வினியோகிக்கப்படுகிறது என்பதை கண்டறியும்படி சுகாதாரத்துறை அமைச்சரகம் உத்தரவிட்டுள்ளது.
முடிந்தவரை கதிர்வீச்சு பாதித்த உணவுப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் படி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. இதை மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தாமல் சாதாரண முறையில் விளக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் எடானோ தெரிவித்துள்ளார். டோக்கியோ நகருக்கு கவா மதா நகரில் உள்ள பண்ணைகளில் இருந்துதான் பால் கொண்டு வரப்படுகிறது. அதில் கதிர்வீச்சு உள்ளதா என கண்டறிய பலத்த சோதனை நடத்தப்பட்டு அதன்பிறகே ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment