பா.ம.க.,வை விமர்சனம் செய்ய தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு எந்த தகுதியும் இல்லை,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
தர்மபுரியில் நடந்த ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்துக்கு, முன்னாள் எம்.பி., செந்தில் தலைமை வகித்தார். தர்மபுரியில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:
தமிழகத்தில் கட்சி நடத்தும் ஒரு நடிகர் என்னைப்பற்றி பல இடங்களில் பேசி வருகிறார். என் மீது அவதூறாக ஏதேதோ பேசுகிறார். இதுநாள் வரை அவருக்கு நான் பதில் சொன்னதில்லை. இப்போது சொல்கிறேன். அந்த நடிகர் அரசியலில் அரிச்சுவடி தெரியாதவர். அவர் என்னை பற்றி பேசுவதா?
கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன் கட்சி ஆரம்பித்தார். அந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டார். அப்போது அந்த நடிகர் ஜெயலலிதா பற்றி கடுமையாக விமர்சித்தார். நம்பக தன்மை இல்லாதவர் என்று கூறினார். இன்னும் ஏதேதோ கூறினார். தைரியம் இருந்தால் தனியாக போட்டி போடுங்கள் என்று கூறினார். ஆனால் தற்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். கேட்டால் ஜெயலலிதாவுடன் கூட்டணி இல்லை. எம்.ஜி.ஆருடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று கூறுகிறார். இதனை அ.தி.மு.க. தொண்டர்கள் நினைத்து பார்க்க வேண்டும்.
அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீது அடக்குமுறை ஏவிய ஜெயலலிதா குறித்து 2009 மார்ச் 28ல், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசியதை அ.தி.மு.க., தொண்டர்கள் மறக்கக் கூடாது. தன் கையெழுத்து இல்லையென கூறிய ஜெயலலிதாவிடம் நாட்டை ஒரு போதும் மக்கள் ஒப்படைக்கக் கூடாது என, பேசிய விஜயகாந்த், மக்களை ஏமாற்றும் வகையில் இது நாள் வரை யாருடனும் கூட்டணி இல்லையென கூறிவிட்டு, தற்போது அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துள்ளார். பல இடங்களில் தே.மு.தி.க., கட்சியைப் பற்றி நான் விமர்சனம் செய்வதில்லை. ஆனால், விஜயகாந்த், பா.ம.க.,வை பற்றி விமர்சனம் செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாது.
அரசியலின் அரிச்சுவடி தெரியாத விஜயகாந்த், பா.ம.க., பற்றி விமர்சனம் செய்ய தகுதியில்லை. கேட்டு பெறும் இடத்தில் பா.ம.க., உள்ளது; கொடுக்கும் இடத்தில் தி.மு.க., உள்ளதால், பா.ம.க.,வுக்கு ஒதுக்கிய சட்டசபை தொகுதிகளை அமைதியாக வாங்கிக் கொண்டது. தனித்து நின்று தன் பலத்தைக் காட்டிய பென்னாகரம் தொகுதியை தி.மு.க., வேட்பாளர் இன்பசேகரனுக்கு விட்டுக் கொடுத்ததை தி.மு.க.,வினர் நினைத்து, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதியிலும் ஐனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment