தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. காலை 10 மணிக்கு அரசின் 2012,13ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச் சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். நிதி பற்றாக்குறையை சமாளிக்க, பட்ஜெட்டில் புதிய வரிகள் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பட்ஜெட் உரையை அமைச்சர் படித்து முடித்த தும் பேரவை நிகழ்ச்சி அத்துடன் ஒத்திவைக்கப்படும்.
இதைத் தொடர்ந்து, அலுவல் ஆய்வுக் குழு கூடி பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது, பட்ஜெட் உரை மீது எத்தனை நாட்கள் விவாதம் நடத்துவது, எந்தெந்த நாளில் எந்த, எந்த துறை மானிய கோரிக்கையை தாக்கல் செய்து நிறைவேற்றுவது என்பது குறித்து விவாதித்து முடிவு செய்யப்படும். அதன்படி, சட்டப்பேரவை கூட்டம் நடக்கும். பட்ஜெட் மீதான விவாதம் 5 நாட்கள் நடக்கும் என்று தெரிகிறது.
விவாதத்துக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதில் அளிப்பார். இதைத் தொடர்ந்து துறை வாரியாக அந்தந்த துறைக்கான அமைச்சர்கள் மானியக் கோரிக்கைகளை தாக்கல் செய்வார்கள். விவாதத்துக்கு பிறகு நிறைவேற்றப்படும். பட்ஜெட் கூட்டம் ஒரு மாதத்துக்கு மேல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத் தொடரில் புதிய மசோதாக்களும் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக அரசு மேற்கொண்டுவரும் வளர்ச்சிப் பணிகள், சமூக நல திட்டங்கள், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட இலவசங்கள், நலிந்த பிரிவினருக்கு உதவித் தொகை வழங்குவது போன்ற திட்டங்களுக்கும் போதுமான நிதி தேவை. அதற்கான நிதி ஆதாரங்களை திரட்ட பட்ஜெட்டில் வரி சீரமைப்பு, கூடுதல் வரி விதிப்பு போன்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் உள்ளாட்சி, கல்வி, சுகாதாரத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும், புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வரலாறு காணாத மின்வெட்டு, பஸ் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல், சட்டம்&ஒழுங்கு பிரச்னைகளை பேரவையில் எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
பட்ஜெட் கூட்டம் தொடங்குவதையொட்டி பேரவை கூடம் நேற்று அலங்கரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். கோட்டையை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோட்டைக்குள் நுழையும் வாகனங்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை உள்ளது. இதனால், அவர் இன்று நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க முடியாது. இதே போல, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜாவும் கூட்டத்தில் பங்கேற்க முடியாது.
* இலவச மற்றும் கல்வி, சுகாதார திட்டங்களுக்கு கூடுதல் நிதி தேவை. அதனால், புது வரிகள் இருக்கலாம்.
* பட்ஜெட் மீதான விவாதம் 5 நாள் நடக்கும். தொடர் ஒரு மாதத்துக்கு மேல் நீடிக்கலாம்.
* மின்வெட்டு உட்பட முக்கிய பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் கிளப்பும்.
No comments:
Post a Comment