கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இன்னும் இரண்டு மாதத்தில் மின்சார உற்பத்தி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தமிழ்நாட்டில் மின்வெட்டு படிப்படியாக குறையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மன் மோகன்சிங்குக்கு இன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தற்போது 2 பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த 2 பிரிவுகளிலும் தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்பது தாங்கள் அறிந்ததே. இரு பிரிவுகளிலும் உற்பத்தி செய்யப்படும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தில், தமிழ்நாட்டுக்கு வெறும் 925 மெகாவாட் மின்சாரமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்தியத் தொகுப்பில் இருந்து ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தருமாறு கடந்த ஆண்டே நான் கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால் மத்தியத் தொகுப்பில் இருந்து தமிழ்நாட்டுக்கு வெறும் 100 மெகாவாட் மின்சாரமே தரப்படுகிறது என்பதை உங்கள் மேலான கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
தமிழ் நாட்டில் தற்போது மிக கடுமையான மின் தட்டுப்பாடு உள்ளது. எனவே கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தையும் தமிழ்நாட்டுக்கு தருவதே சரியானதும், நியாய மானதும் ஆகும்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொண்டு செல்வதற்கான பாதையில் இன்னமும் பிரச்சினைகள் நீடிக்கிறது. எனவே கூடங்குளத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்கே தருவது தவிர்க்க முடியாதது. இதையும் நான் தங்களது மேலான கவனத்துக்கு கொண்டு வருகிறேன். எனது மேற்கண்ட கோரிக்கையை நீங்கள் பரிசீலித்து சாதகமான முடிவை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
எங்களுக்கு மின்சாரம் தேவைப்படுவதால், இதை பயன்படுத்த மீண்டும் ஒரு தடவை கேட்டுக் கொள்கிறேன். மற்றபடி எனது ஒத்துழைப்பு தொடரும் என்று உறுதி கூறுகிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment