இணையதளங்களில் தனுசின் '3' படத்தை வெளியிட ஐகோர்ட்டு தடை விதித்தது. தனுஷ்-ஸ்ருதி ஜோடியாக நடித்துள்ள '3' படத்தை தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். கஸ்தூரிராஜா தயாரித்துள்ளார்.
இப்படம் நாளை ரிலீசாகிறது. இந்த நிலையில் கஸ்தூரி ராஜா சென்னை ஐகோர்ட்டில் இணையதளங்களில் '3' படத்தை வெளியிட தடை கோரி வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
தனுஷ் நடித்த '3' படம் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு உள்ளது. ரசிகர் மத்தியில் இப்படத்துக்கு அதிக வரவேற்பு உள்ளது. '3' படம் ரிலீசாவதற்கு முன்பே அப்படத்தில் இடம் பெற்ற கொலைவெறி பாடல் வெளியாகி உலகம் முழுவதும் பிரபலம் அடைந்து உள்ளது.
சமீபகாலமாக புதுப் படங்களை திருடி இணைய தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதனால் தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதுபோல் '3' படத்தையும் இணைய தளங்களில் வெளியிடலாம் என அஞ்சுகிறேன். இதனால் பெரிய இழப்பு ஏற்படும்.
எனவே '3' படத்தை இணைய தளங்களில் பதிவு இறக்கம் மற்றும் பதிவு ஏற்றம் செய்ய தடை விதிக்க வேண்டும். டி.வி.டி., வி.சி.டி.யில் வெளியிடவும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி கே.பி.கே. வாசுகி விசாரித்தார். கஸ்தூரிராஜா சார்பில் வக்கீல் அரண்மோகன் ஆஜராகி வாதாடினார். விவாதம் முடிவில் '3' படத்தை இணைய தளங்களில் வெளியிட கூடாது என தடை விதித்து நீதிபதி உத்தர விட்டார்.
No comments:
Post a Comment