ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் கேத் வின்ஸ்லெட் நடிப்பில் கடந்த 1997-ம் ஆண்டு வெளியாகி, இந்தியா உள்ளிட்ட உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்று வசூலில் சரித்தர சாதனை படைத்த படம் டைட்டானிக்.
1912ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி டைட்டானிக் என்ற பிரம்மாண்ட கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. இதில் பயணம் செய்த 2,223 பயணிகளில் 1,517 பேர் உயிரிழந்தனர்.
இந்த வரலாற்று சோகத்தை மையப்படுத்தி, அதில் ஒரு அற்புதமான காதல் கதையை புகுத்தி டைட்டானிக் என்ற பெயரில் படம் இயக்கினார் ஜேம்ஸ் கேமரூன். 11 ஆஸ்கர் விருதுகளை வாங்கி குவித்த இப்படம் வசூலிலும் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வருகிற ஏப்ரல் 15, 2012-அன்று டைட்டானிக் கப்பல் மூழ்கியதன் 100-ம் ஆண்டு நினைவு தினத்தை நினைவு கூறும் வகையில் டைட்டானிக் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய இருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன். அதுவும் 2-டி மற்றும் 3-டி தொழில்நுட்பங்களில் மாற்றி வெளியிட இருக்கிறார்.
இத்தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் டைட்டானிக் 3-டி வருகிற ஏப்ரல் 5-ம் தேதி முதல் உலகம் முழுக்க ரிலீசாக இருக்கிறது. மேலும் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் வெளியிடப்படுகிறது.
1997-ஆம் ஆண்டில் புதிய தொழில்நுட்பங்களுடன் வெளிவந்த டைட்டானிக் படத்தின் பிரம்மாண்டத்தைப் பார்த்து அனைவரும் பிரம்மித்தனர். இப்பொழுது 3-டி தொழில்நுட்பத்தை புகுத்தியதன் மூலம் அப்படத்தின் பிரம்மாண்ட காட்சிகள் மிகவும் தத்ரூபமாக நம் கண்முன்னே நடப்பது போன்ற பிரமிப்பை வெளிப்படுத்துகிறது.
இன்றைய இளைய தலைமுறைக்கு டைட்டானிக் 3-டி படம் ஒரு கோடைக்கால கொண்டாட்டமாக அமையும் என்பதை உறுதியிட்டு கூறமுடியும்.
No comments:
Post a Comment