தென்சென்னை மாவட்ட பா.ம.க. சார்பில் புதிய அரசியல், புதிய நம்பிக்கை என்ற பெயரில் வேளச்சேரியில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பகுதி செயலாளர் சகாதேவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
அரசியலால்தான் இந்த உலகமே இயங்குகிறது. தொண்டு செய்ய, நல்லது செய்ய ஏதாவது ஒரு அரசியல் கட்சி இருந்தால்தான் நல்லது. மற்ற கட்சிகளுக்கும் எங்களுக்கும் ஏராளமான வித்தியாசம் உண்டு. 15 ஆண்டுகளாக போயஸ் தோட்டம், கோபாலபுரம் என சென்று அவர்கள் முதல்வர் ஆவதற்கு பாடுபட்டு உறுதுணையாக இருந்தே நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு.
தற்போது மக்களிடம் பாடம் கற்று இருக்கிறோம். மேலும் மக்களிடம் படித்துக் கொண்டிருக்கிறோம். கடந்த 45 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் தமிழகத்தை சீர்குலைத்து விட்டன. மது, திரைப்படம், இலவசங்களை கொடுத்து கெடுத்து விட்டார்கள். அரசியல் கட்சிகளிடையே வித்தியாசமான கட்சியான பா.ம.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்ற புதிய அரசியலை மக்களுக்கு சொல்லி புதிய நம்பிக்கையை மக்களிடம் விதைத்து அதன் மூலம் 2016-ம் ஆண்டு பா.ம.க. தமிழகத்தை ஆளும்.
தனி ஈழம், தமிழ் ஈழம் என்று தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டும் கலைஞர் வசனம் பேசுவார். ஆளும் கட்சியாக இருக்கும் போது இதை மறந்து விடுவார்கள். இலங்கையில் தமிழர் வீடுகளில் கல்யாணம், சாவு என்றால் கூட ராணுவ கட்டுப்பாட்டில்தான் நடக்கிறது. 4-ம் தர குடிமக்களாகத்தான் தமிழர்கள் உள்ளனர்.
திராவிடத்துக்கு நூற்றாண்டு விழா நடத்தும் இவர்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லை. அடுத்த மாதம் முதல் சென்னையில் 4 மணி நேரம் மின்வெட்டு வருகிறது. இது வரை ஆட்சி செய்த கட்சிகள் மின்உற்பத்தி பற்றி எந்த தொலை நோக்கு திட்டமும் இல்லாததால் தான் தற்போது மின்சாரம் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்.
கூடங்குளம் தொடங்கினால் மின் பற்றாக்குறை சரியாகி விடும் என்று மாயத் தோற்றத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள். தமிழகத்தில் 4000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது. கூடங்குளம் மின் நிலையத்தால் கிடைக்கப்போவது வெறும் 240 மெகாவாட் மின்சாரம் மட்டும்தான். 65 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். படித்து விட்டு இளைஞர்கள் சும்மா இருப்பதால் வன்முறை, சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டுக்கு ஆளாகி விடுகிறார்கள்.
தரமான இலவச கல்வி கொடுத்தாலே இளைஞர்கள், வேலை வாய்ப்பை உருவாக்கி கொள்வார்கள். மற்ற கட்சிகள் “நாணயம்” வைத்துள்ளார்கள். நாங்கள் நாணயமான கட்சி நடத்துகிறோம். இந்த நம்பிக்கை நாணயத்தை வைத்து மக்கள் மனதில் மாற்றத்தை உருவாக்கி ஆட்சி மாற்றம் செய்து காட்டுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, ஜெயராமன், கன்னியப்பன், சிவக்குமார், துலுக்கானம், ஜனார்த்தனன், வே.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment