ஆசிய பெண்கள் குத்துச்சண்டை தொடரில் இந்தியாவின் மேரி கோம், சரிதா தேவி ஆகியோர் இறுதிப் போட்டிகளில் வெற்றிப் பெற்று தங்கப்பதக்கங்களை வென்றனர்.
மங்கோலியா நாட்டின் தலைநகர் உல்டான்பாடர் நகரில் பெண்களுக்கான 6வது ஆசிய குத்துச் சண்டை தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா, சீனா, மங்கோலியா உட்பட மொத்தம் 19 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் நேற்று நடைபெற்ற 51 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம், சீனா வீராங்கனை ரென் கென்கன் ஆகியோர் மோதினர். இறுதிப் போட்டியில் வெற்றிப் பெற உலக சாம்பியனான ரென் கென்கன் கடும் முயற்சி மேற்கொண்டார். ஆனால் போட்டியின் முடிவில் 14-8 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியாவின் மேரி கோம் வெற்றிப் பெற்று, தங்கப்பதக்கம் வென்றார்.
அதேபோல 60 கிலோ எடைப் பிரிவிற்கான இறுதிப் போட்டியில் இந்தியாவின் சரிதா தேவி, தஜிகிஸ்தானின் கோரிவா மவ்சூனா ஆகியோர் மோதினர். இதில் சரிதா தேவி 16-9 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிப் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார்.
ஆனால் இந்திய வீராங்கனைகளான பிங்கி ஜங்ரா(48 கிலோ) சோனியா லதர்(54 கிலோ), மோனிகா சான்(69 கிலோ), பூஜா ராணி(75 கிலோ) ஆகியோர் இறுதிப் போட்டிகளில் தோல்வியை தழுவி, வெள்ளிப் பதக்கங்களை பெற்றனர்.
No comments:
Post a Comment