திருச்சியில் நேற்று காலை கொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயத்திற்கு ஏகப்பட்ட எதிரிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் யாராவதுதான் கொலை செய்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கே.என்.நேருவின் வலதுகரம் மற்றும் இடதுகரமாக விளங்கி வந்தவர் ராமஜெயம். மிகக் குறுகிய காலத்திலேயே கே.என்.நேருவும், ராமஜெயமும் திருச்சி மாவட்டத்தின் அசைக்க முடியாத பிரமுகர்களாக மாறியவர்கள். இருவரும் இணைந்து இரட்டைக் குழல் துப்பாக்கி போல செயல்பட்டதால் திருச்சி திமுக இவர்கள் வசமானது.
திருச்சி திமுகவில் மட்டுமின்றி, மாவட்டத்திலும் கூட இவர்களை மீறி எதுவும் நடக்காது என்ற நிலைதான் கடந்த திமுக ஆட்சியின்போது நிலவியது. குறிப்பாக ராமஜெயத்தைப் பிடித்தால் ஆகாத காரியம் இல்லை என்ற அளவுக்கு கடந்த திமுக ஆட்சியில் கொடி கட்டிப் பறந்துள்ளார் ராமஜெயம்.
நேருவுக்கு உற்ற துணையாக இருந்து அத்தனை காரியங்களையும் பார்த்து வந்தார் ராமஜெயம். தேர்தல்களின்போது இவர்தான் தி்ட்டமிடுதல், களப் பணியாற்றுதல், இன்ன பிற பணிகள் என அத்தனையையும் பார்ப்பார்.
குவாரி, ரியல் எஸ்டேட், பொறியியல் கல்லூரி என ஏகப்பட்ட தொழில்களில் ஈடுபட்டிருந்தார் ராமஜெயம். அதேபோல கட்டப் பஞ்சாயத்தும் செய்து வந்தார் என்றும் கூறப்படுகிறது. தனது அண்ணனின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ராமஜெயம் பல கட்டப் பஞ்சாயத்துக்கள் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் இவருக்கு எதிரிகளும் அதிகம் என்கிறார்கள். குறிப்பாக இவருக்குச் சொந்தமான என்ஜீனியரிங் கல்லூரிக்குத் தேவையான இடத்தை ஆக்கிரமித்து கட்டியதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலம் தொடர்பாக மோதல்கள், வழக்குகள் உள்ளன.
மேலும் கடந்த திமுக ஆட்சியின்போது ரியல் எஸ்டேட் அதிபரையும், அவரது தம்பியையும் காரில் வைத்து உயிருடன் தீவைத்துக் கொளுத்திக் கொலை செய்தனர் சிலர். இந்த கொலைக்குக் காரணமே ராமஜெயம்தான் என்று அப்போது பரபரப்பாக குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும் நடந்தது திமுக ஆட்சி என்பதால் ராமஜெயம் மீது காவல்துறை கரங்கள் படியவில்லை.
அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ராமஜெயம் மீதும்,நேரு மீதும் ஏகப்பட்ட வழக்குகள் பாய்ந்தன பெரும்பாலும் நில மோசடி வழக்குகளே தொடரப்பட்டன.
திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த டாக்டர் சீனிவாசன், திருச்சி கலைஞர் அறிவாலயத்தை கட்ட தனது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக கே.என்.நேரு, ராமஜெயம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதேபோல் ராமஜெயம் மீது திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே ஒரு ஓட்டலை அபகரிக்க முயற்சித்ததாக ஒரு வழக்கும், திருச்சி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த கருணாநிதி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஒரு வழக்கும் அவர் மீது பதிவு செய்யப்பட்டது.
கே.கே.நகர் பகுதியை சேர்ந்த மொரைஸ் என்பவர் விமானநிலைய போலீசில் ஒரு புகார் கொடுத்து இருந்தார். அதில், தனது நிலத்தை ஏமாற்றி மோசடி செய்து, அங்குள்ள திருவள்ளூர் சிலையை சேதப்படுத்தியதாகவும் கே.என்.நேரு, அவருடைய தம்பி ராமஜெயம் உள்பட சிலர் மீது புகார் கொடுத்து இருந்தார்.
இந்த புகார்களின் அடிப்படையில் ராமஜெயம் மீது 4 வழக்குகளை போலீசார் பதிவு செய்து இருந்தனர். இந்த நில மோசடி புகார்களில் சிக்கிய ராமஜெயம் சில மாதங்களுக்கு முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன்பிறகு கோர்ட்டில் ஜாமீன் பெற்று தில்லைநகரில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார்.
இப்படி ஏகப்பட்ட எதிரிகள், எதிர்ப்புகள், தொழில் போட்டிகள், வழக்குகள் புடை சூழ வலம் வந்த ராமஜெயத்தை முன்விரோதம் காரணமாகவே யாரோ சிலர் கொலை செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அதேசமயம், இது அரசியல் ரீதியான கொலையாகத் தெரியவில்லை என்றும் மக்களிடையே பேச்சு அடிபடுகிறது.
எப்படி இருப்பினும், திருச்சி மாவட்டத்தில் மிக முக்கியப் பிரமுகரமாக வலம் வந்த ஒருவரான ராமஜெயம் கை, கால்களைக் கட்டி கொலை செய்யப்பட்டிருப்பது திருச்சி மக்களை அதிர வைத்துள்ளது.
No comments:
Post a Comment