இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பான விவகாரத்தில் இந்தியாவின் இரட்டைவேடம் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அம்பலமாகியுள்ளது என்று கர்நாடகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய கர்நாடகத் தமிழர் பேரவைத்தலைவர் தனஞ்செயன், ‘இலங்கை மீதான போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை நடத்த வலியுறுத்தும் அமெரிக்காவின் தீர்மானம் நிறைவேறியது ஆறுதல் அளித்தாலும், இந்தியா கொண்டுவந்த திருத்தம் வேதனை அளிக்கிறது. போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. விசாரணை நடத்தினால், அது இலங்கை அரசின் முன் அனுமதிபெற்று மேற்கொள்ளவேண்டும் என்று இந்தியா தீர்மானத்தில் திருத்தம் செய்துள்ளது. இது தீர்மானத்தின் நோக்கத்தைச் சிதைத்துள்ளது. இதன்மூலம், பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்ற இந்தியாவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது’ என்றார்.
மேலும், ‘வாக்கெடுப்பில் பங்கேற்காமல், இந்தியா வெளியேறியிருந்தால் கூட பாராட்டலாம். ஆனால் தீர்மானத்தின் நோக்கத்தை இந்தியா சீர்குலைத்துள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஈழத்தமிழர்களின் துயர்போக்கும் தார்மிகக் கடமை இந்தியாவுக்கு உள்ளது. இதை மறந்துவிட்டு இலங்கையின் நட்பை நாடுவதற்காக, தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் தமிழர்களின் கொந்தளிப்பை மட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவின் செயல்பாடு அமைந்துள்ளது. ஈழத்தமிழர்கள் சம உரிமையோடு வாழும் நிலை உருவாகும்வரை போராட்டத்தைத் தணியவிடாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு தமிழக அரசியல் கட்சிகளுக்கு உள்ளது.’ என்றும் தனஞ்செயன் கூறியுள்ளார்.
ஈழத்தமிழர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட இந்திய அரசுக்குத் தொடர்ந்து நெருக்கடி தந்தவண்ணம் இருக்க வேண்டும் என்று தமிழர் அமைப்புகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment