சீனா, வெளிநாடுகளிடம் வாங்கியுள்ள கடன், கடந்த ஆண்டுடன் சேர்த்து 695 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது, கடந்த 27 ஆண்டுகளாக வாங்கிவந்த கடனைவிட மிக அதிகம். இந்த நிலைமை நீடித்தால், சீனாவின் நிதி நிலைமை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இது குறித்து சீன அன்னியச் செலாவணி நிர்வாகத் துறை, சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2010ல் மட்டும், சீனாவின் வெளிநாட்டுக் கடன், 146 பில்லியன் டாலர் அதிகரித்து, ஒட்டு மொத்தமாக 695 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரையிலான கணக்குப்படி, சீனாவின் குறுகிய காலக் கடன், 72 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவும் இதுவரை இல்லாத அளவிற்கு மிக அதிகம் தான். இந்தக் கடன், 2010ல் 68 சதவீதமாகவும், 2009ல் 60 சதவீதமாகவும் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. சீனாவின் குறுகிய காலக் கடன், சர்வதேச பொதுக் கணக்கீட்டை விட 25 சதவீதம் அதிகமாகியுள்ளது. அதனால் சீன மத்திய வங்கி, அந்நாட்டு அரசை எச்சரித்து உஷார் படுத்த வேண்டும் என நிதியியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனா, தன்னுடைய அன்னியச் செலாவணி கையிருப்பின் மதிப்பைக் குறைப்பதற்காக மேலும் மேலும் அதிக அளவில் கடன் வாங்கியதால் தான் அதன் வெளிநாட்டுக் கடன் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். சீனப் பொருளாதாரம் மந்த கதியை அடைந்துள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ள நேரத்தில், அதன் கடனும் அதிகரித்துள்ளது என்பதால், அது தனது நிதிநிலைமையை உடனடியாகச் சரி செய்ய வேண்டிய அவசியத்தில் உள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.
No comments:
Post a Comment